2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கே.பி தொடர்பில் ரி.ஐ.டி துப்பறியும்

Gavitha   / 2015 நவம்பர் 13 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவரும் மற்றும் சர்வதேச ஆயுத வழங்குநருமான கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தொடர்பில் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் அடங்கிய அறிக்கையின் பிரகாரம், அவர் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளிலோ அல்லது குற்றங்கள் தொடர்பான சந்தேகநபரோ அல்ல என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், பொலிஸார், நேற்று அறிக்கையிட்டனர்.

பொலிஸ் தலைமையகத்தின் உதவி பொலிஸ் அதிகாரி எம்.ஏ.எம். நவாஸினால் விடுக்கப்பட்டிருந்த இவ்வறிக்கை, மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஜயசூரியவினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  

அந்த அறிக்கையின் பிரகாரம் கே.பி என்பவர், நாட்டில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பங்கள், மனிதப் படுகொலைகள் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களுக்காக தேடப்பட்ட நபரல்ல.

அவ்வறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டாலும் அவர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள இன்னும் சில சம்பவங்கள் தொடர்பில் பயங்கரவாத புலனாய்வு பிரிவு (ரி.ஐ.டி) துப்பறியும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது என்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் கவனத்துக்கு நேற்று கொண்டுவந்தார்.  

கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் என்பவரைக் கைதுசெய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கக்கோரி, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) நாடாளுமன்ற உறுப்பினராக விஜித்த ஹேரத், தாக்கல் செய்திருந்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் விஜித்மலல்கொட முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே மேற்கண்டவாறு அறிக்கையிடப்பட்டுள்ளது.

இந்தமனுவில், பிரதிவாதிகளாக பொலிஸ் மாஅதிபர், சட்டமா அதிபர் உள்ளிடோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், கே.பி வெளிநாடு செல்வதை தடுத்து விடுத்திருந்த இடைக்காலத் தடை அறிக்கையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரையிலும் நீடிக்குமாறு கட்டளையிட்டது.

அவர் தொடர்பில் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணை மற்றும் அந்த விசாரணையிலிருந்து வெளியாகும் விடயங்கள் தொடர்பிலான முழுமையான அறிக்கையை பெப்ரவரி மாதம் 3ஆம் திகதிக்கு முன்னரான ஒருவாரத்துக்கு முன்னர் நீதிமன்றத்தில் முன்வைக்குமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X