Editorial / 2026 மே 11 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
சுமார் 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 'ஐஸ்' மற்றும் 'ஹெரோயின்' போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும், 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது: அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றில் கடந்த சனிக்கிழமை (09) இரவு, சோதனை மேற்கொள்ளப்பட்டது. அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம். பிரியங்கர தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த இந்த அதிரடி சோதனையின்போது இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (10) ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே அவர்களை 6 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க நீதவான் அனுமதி வழங்கினார்.
நீண்டகாலமாக கடல் மற்றும் தரை வழியாகத் திட்டமிட்ட முறையில் இக்கடத்தலில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதானவர்களில் 'கடற்குதிரை' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள் மீட்கப்பட்டது. மற்றைய சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் 100 மில்லி கிராம் 'ஐஸ்' மற்றும் 5 கிராம் 250 மில்லி கிராம் 'ஹெரோயின்' என்பன கைப்பற்றப்பட்டன.
மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிள், 80 ஆயிரம் ரூபா பணம், இலத்திரனியல் தராசு மற்றும் நவீன கைத்தொலைபேசிகள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 40 மற்றும் 31 வயதுடைய இவர்களில் ஒருவர் தலைமுடி வெட்டும் தொழில் செய்பவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் புத்தளம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்பவர்கள் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புத்தளம் உடப்பு மற்றும் கல்முனைப் பகுதிகளைச் சேர்ந்த இவர்கள், காரைதீவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து இக்கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைது செய்யப்பட்டபோது பொலிஸாருக்கு முரணான வாக்குமூலங்களை வழங்கி விசாரணைகளைத் திசைதிருப்பவும் இவர்கள் முயற்சித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார ஆகியோரின் வழிநடத்தலில் இந்தச் சோதனை நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.






39 minute ago
52 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
52 minute ago
58 minute ago
1 hours ago