Freelancer / 2026 மே 18 , பி.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் துயர வரலாற்றைச் சுமந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், 17ஆவது ஆண்டு மே 18 நினைவேந்தல் நாள் திங்கட்கிழமை (மே.18) அன்று உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
தாயகப் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்ற வேளையில், பிரதான நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
தவத்திரு அகத்தியர் அடிகளாரின் பிரகடன உரையுடன் நிகழ்வுகள் காலை 10:15 மணிக்குத் ஆரம்பமாகின. 10:29க்கு நினைவொலி எழுப்பப்பட்டு, 10:30க்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, இறுதிப் போரில் தனது குடும்பத்தின் 4 உறுப்பினர்களை இழந்த வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீறஞ்சன் ரினோசாவால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது.
உறவுகள் எழுப்பிய ஒப்பாரிகளும் அழுகுரல்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சோகத்தில் மூழ்கடித்தன. பலர் தமது மறைந்த உறவுகளின் படங்களை வைத்து, விளக்கேற்றிப் படையல் படைத்து அழுதனர்.
இதற்கு முன்னதாக, காலை 6:00 மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து வாகனப் பேரணியாக முள்ளிவாய்க்கால் நோக்கி வந்ததால் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது.
நினைவேந்தலை முன்னிட்டு முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி ஆகிய நகரங்களில் வர்த்தக நிலையங்கள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. வீதி நெடுகிலும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு 'முள்ளிவாய்க்கால் கஞ்சி' வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளும் மதத் தலைவர்களும் பங்கேற்றனர்.
மன்னாரிலும் தந்தை செல்வா சிலைக்கு முன்பாக வி. எஸ். சிவகரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டு கஞ்சி வழங்கப்பட்டது. கிழக்கிலும் வாகரை, குருமன்வெளி, திருகோணமலை சிவன் கோயிலடி முன்றில் ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நடைபெற்றது.
தலைநகர் கொழும்பிலும் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் காலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது. மாலை 5:00 மணிக்கு வெள்ளவத்தை கடற்கரையில் சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் நடந்த நினைவேந்தலில் தமிழ் மக்களுடன் சிங்கள மக்களும் இணைந்து அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது. R






49 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
4 hours ago
7 hours ago
7 hours ago