2026 பெப்ரவரி 17, செவ்வாய்க்கிழமை

கனடிய உயர்ஸ்தானிகர்- பொதுநிர்வாக அமைச்சர் சந்திப்பு

S.Renuka   / 2026 பெப்ரவரி 17 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய இசபெல் மார்ட்டின் (H.E. Isabelle Martin) அவர்களுக்கும் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று திங்கட்கிழமை (16) அன்று அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன

மாகாண சபைத் தேர்தல் குறித்து கனடா விசேட கவனம் செலுத்தியதுடன், இலங்கையில் தாமதடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து உயர்ஸ்தானிகர் இதன்போது வினவினார்.

 இதற்குப் பதிலளித்த அமைச்சர், அரசாங்கம் தேர்தலை வேண்டுமென்றே தாமதப்படுத்தவில்லை என்றும், சில சட்ட மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 இனப் பிரச்சினைக்கான தீர்வாக மாகாண சபைத் தொகுதியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அது குறித்து எதிர்காலத்தில் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, கனடாவின் " இந்து -பசிபிக் மூலோபாயம்" (Indo-Pacific Strategy) மற்றும் அதில் இலங்கையின் பங்கு குறித்துக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, இந்த மூலோபாயத்தின் கீழ் இதுவரை பசிபிக் பிராந்தியத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட போதிலும், இந்த ஆண்டு முதல் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

 இந்தியப் பெருங்கடலின் மையப்புள்ளியாக இலங்கை தீர்மானமிக்க முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளதால், இந்த மூலோபாயத்தின் ஊடாக எதிர்காலத்தில் இலங்கை பல நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ள உயர்கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கனடாவின் ஆதரவை அமைச்சர் அபயரத்ன இதன்போது கோரினார். நல்லிணக்கம், உயர்கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஆதரவளிக்க கனடிய உயர்ஸ்தானிகர் தனது உடன்பாட்டைத் தெரிவித்தார்.

குறிப்பாக கனடாவின் 'Pathways to Peace' திட்டத்தின் ஊடாக இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், இரண்டாவது மொழியாகப் பரஸ்பர மொழிகளைக் கற்றுக்கொள்வதை ஊக்குவித்து தொடர்பாடலை மேம்படுத்தவும் கனடா ஆதரவளிக்கும் என்றும், உயர்கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு கனடாவில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டங்களுக்கான மேலதிக வாய்ப்புகளை வழங்கவும் இதன்போது இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ் புத்தளம், மன்னார் மற்றும் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் நிலவும் குடிநீர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்கவும், முதற்கட்ட ஆய்வின் பின்னர் உரிய திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் கனடியப் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்தும் இதன்போது சுருக்கமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், பிராந்திய ரீதியாக இலங்கை இந்தியாவுடன் நெருக்கமாகச் செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோகபண்டார, கனடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் மற்றும் வர்த்தக ஆலோசகர் க்வென் டெம்மல் ( Gwen Temmel) மற்றும் ஒத்துழைப்புத் தலைவர் கிரில் ஜோர்டானோவ் (Kiril Iordanov) ஆகியோரும் கலந்துகொண்டனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X