2026 மே 17, ஞாயிற்றுக்கிழமை

dd

கருமலையூற்று வீதித்தடை முழுமையாக அகற்றவும்

Editorial   / 2026 மே 17 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச். ஹஸ்பர்

திருகோணமலை, கருமலையூற்று கடற்கரைப் பகுதியில் விமானப்படையினரால் ஏற்படுத்தப்பட்ட வீதித்தடை மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்   அப்பகுதிக்கு நேரடி கள விஜயம் மேற்கொண்டு மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“கருமலையூற்று கடற்கரைப் பகுதியில் பல தசாப்தங்களாகப் பொதுமக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தி வந்த பிரதான வீதியில், விமானப்படையினரால் எவ்வித முன்னறிவிப்புமின்றித் திடீரென வீதித்தடை ஒன்று கடந்த மே மாதம் 5ஆம் திகதி காலை,  அமைக்கப்பட்டது. எவ்வித அனுமதியுமின்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையும் உருவானது.

இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, குறித்த வீதித்தடை அகற்றப்படும் எனப் பிரதி அமைச்சர் அன்றைய தினமே உறுதியளித்திருந்தார். இருப்பினும், வீதித்தடை முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் கள நிலவரத்திற்கு முரணாக உள்ளன.

நான் மேற்கொண்ட கள விஜயத்தின்போது, அகற்றப்பட்டதாகக் கூறப்பட்ட கடவை இன்னும் வீதிக்கு அருகிலேயே காணப்படுவதையும், அப்பகுதியில் தொடர்ச்சியாக விமானப்படை அதிகாரிகள் நிலைகொண்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இது மக்களிடையே பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலைமையில்:பொதுமக்கள் பயன்படுத்தும் பொது வீதியை மூடுவதற்கு யாருடைய உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது?

முறையான முன்னறிவித்தல் இன்றி இவ்வாறானதொரு தன்னிச்சையான நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான காரணம் என்ன?

பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், அகற்றப்பட்ட கடவை ஏன் இன்னும் அந்த இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது?

கடவை அகற்றப்பட்டதாகக் கூறப்பட்டு 9 நாட்கள் கடந்தும், ஏன் இன்னும் விமானப்படை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறாமல் தங்கியுள்ளனர்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பொதுமக்களின் சுதந்திரமான நடமாட்டத்தையும் பாதிக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தெளிவான விளக்கத்தை வழங்க வேண்டும். வெறுமனே கண்துடைப்பு நடவடிக்கைகளைச் செய்யாமல், குறித்த வீதித்தடையை அவ்விடத்திலிருந்து முழுமையாக அகற்றி, மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் அவ்வறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .