2026 மே 14, வியாழக்கிழமை

’கறுப்புப் பூஞ்சை நோய் இலங்கைக்கு புதிதல்ல’

Niroshini   / 2021 மே 25 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் சில நோயாளர்களைத் தாக்கியுள்ள கறுப்புப் பூஞ்சை நோய் தொடர்பில், இலங்கையிலும் தற்போது பெரிதும் பேசப்பட்டு வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்த நபரொருவர், இந்தக் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு இலக்காகியிருந்தார் என்ற தகவலை அடுத்தே, இந்நோய் தொடர்பான அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

எவ்வாறெனினும், 2019ஆம் ஆண்டு முதலே, கறுப்புப் பூஞ்சை நோய்க்கு இலக்கான நோயாளிகள் பலர், இலங்கையிலிருந்து கண்டறியப்பட்டுள்ளனர் என்று, இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில், கொழும்பில் நேற்று (24) நடத்திய ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தேசிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சை நோய்கள் தொடர்பான பிரிவின் தலைவியும் விசேட வைத்திய நிபுணருமான பிரிமாலி ஜயசேகர, “இலங்கையில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கு, இந்நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இந்தக் கறுப்புப் பூஞ்சை நோய், 'மியூகொமய்கொசிஸ்' என்று அழைக்கப்படுகிறது. இது, இலங்கைக்குப் புதிய நோயல்ல. 2019ஆம் ஆண்டில், இந்நோய்த் தொற்றுக்கு இலக்கான 42 நோயாளிகள், இலங்கையில் கண்டறியப்பட்டனர். 2020ஆம் ஆண்டிலும், 24 பேர் கண்டறியப்பட்டனர். 2021இல் இதுவரையான காலத்தில், 24 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

“இருப்பினும், இவர்களில் எவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. இந்தக் கறுப்புப் பூஞ்சை நோய் என்பது, இலங்கைக்குப் புதிதானது அல்ல. அது மாத்திரமன்றி, அந்தத் தொற்று, பரவலடைவதற்கான அனைத்துச் சூழல் அமைப்புகளும் இலங்கையில் காணப்படுகின்றன. எமது மண்ணிலும் அது படர்ந்திருக்கின்றது. நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களையே, இந்நோய் பற்றிக்கொள்கிறது” என, விசேட வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .