2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கல்வியமைச்சுக்குள் தடாலடியாக நுழைந்த கிழக்கு முதலமைச்சர்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 18 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், பைஷல் இஸ்மாயில்

இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்குள், நேற்றுத் திங்கட்கிழமையன்று (17), தடாலடியாக நுழைந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், அங்கு கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் சம்பந்தமான போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார்.  

தான் முன்னெடுத்த போராட்டம், சுமார் 5 மணித்தியாலப் பேச்சுவார்த்தையை அடுத்து வெற்றி காணப்பட்டதாக, போராட்டத்தை முடித்துக்கொண்டு வெ ளியே வந்த முதலமைச்சர், ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.  

கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் பெற்ற கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பான இறுதிக் காலக்கெடு, இன்று செவ்வாய்க்கிழமையுடன் முடிவடையவிருந்த நிலையில், முதலமைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.  

கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்து கல்விக் கல்லூரிகளிலிருந்து வெளியேறிய கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணத்திலேயே நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே, அவர் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தார். உரியத் தீர்வுக் கிடைக்கும் வரை, தான் கல்வி அமைச்சைவிட்டு அகலப் போவதில்லை எனவும் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் சூளுரைத்திருந்தார். 

இதனையடுத்து, உடனடியாக முதலமைச்சரைச் சந்தித்த கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, முதலமைச்சரின் கோரிக்கை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, கல்வியமைச்சின் பிரதம ஆணையாளருக்கு பணிப்புரை விடுத்தார்.  

இதனையடுத்து, விடயங்களை ஆராய்ந்த கல்வியமைச்சின் பிரதம ஆணையாளர் எச்.எம்.பண்டார மற்றும் கல்வியமைச்சின் ஆசிரியர் பகிர்ந்தளிப்புப் பிரிவின் சிரேஷ்ட உதவி செயலாளர் ஆகியோர், முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க, வெளி மாகாணங்களில் நியமனம் பெற்ற கிழக்கின் கல்வியியற் கல்லூரிகளில் பயின்ற அத்தனை ஆசிரியர்களையும், கிழக்கு மாகாணத்திலேயே நியமிப்பதாக உறுதியளித்தனர். 

அத்துடன், கிழக்கின் ஆசிரியர்கள், தங்களது கடமைகளை பொறுப்பேற்பதற்கான காலக்கெடுவை, மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பதாகவும் உறுதியளித்தனர்.  

இதனையடுத்து, கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை சந்தித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், அமைச்சருக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துவிட்டு, கல்வியமைச்சை விட்டு வெளியேறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .