Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 நவம்பர் 24 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்ஷன் இராமானுஜம்
கல்வியமைச்சால் வழங்கப்படும் நியமனங்கள், ஆட்சேர்ப்புகள் என அனைத்தும் அடக்கப்பட்ட அறைக்குள் மறைக்கப்பட்டே வழங்கப்படுகின்றன. இது ஓர் அபாயமான சூழலாகும்” என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, “கல்வித்துறையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மூன்றும் புறக்கணிக்கப்படுகிறன” என்றும் குறிப்பிட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் கல்வி, விளையாட்டு, உள்நாட்டு அலுவல்கள்,வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதம், நேற்று (23) இடம்பெற்றது.
இந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாங்கள், தன்மானத்தை விட்டு, சுயமரியாதையை விட்டு வரவு- செலவுத்திட்டத்துக்கு வாக்களித்தோம். எனினும், கல்வித்துறையை எடுத்துநோக்கும் போது, நாங்கள் புறக்கணிக்கப்படுகின்றோம்.
“கல்வியமைச்சில், 700 பேர் தொழில்புரிகிறார்கள். அவர்களில் 20 பேர் மாத்திரமே தமிழர்கள். கல்வியமைச்சில் கடந்த 13 மற்றும் 15ஆம் திகதிகளில் சிற்றூழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன. ஆனால், தமிழ் பேசும் எவருக்கும் இதன்போது நியமனம் வழங்கப்படவில்லை.
“இந்த நாட்டில் எல்லோரையும் அணைத்துக்கொள்ளக் கூடிய சூழல் ஏற்பட வேண்டும். சம உரிமை, சமத்துவத்துடன் இன விகிதாசார ரீதியில் நியமனங்கள் வழங்கப்படவேண்டும். இங்கே நான் ஒரு கேள்வியை முன்வைக்கிறேன். கல்விக்குப் பெருந்தொகை நிதி ஒதுக்கப்படுகின்றது. அந்த நிதி யாரை சென்றடைகின்றது? அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் அந்த நிதி சென்றடைகின்றதா?
“கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இராணுவத்தால் முன்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இராணுவச் சின்னங்களோடும், சீருடைகளோடும் இராணுவ ஆக்கிரமிப்புக்குள் சிறுவர்கள் இருக்கிறார்கள். எமது பகுதிகளில் மாத்திரம் சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் முன்பள்ளிகள் நடத்தப்படுவதன் காரணம் என்ன?” எனக் கேள்வியேழுப்பினர்.
இதனபோது, ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், “இங்கே கல்வி அமைச்சுத் தொடர்பான விவாதமே இடம்பெறுகின்றது. முன்பள்ளிகள், சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுக்குப் பொறுப்பானவையாகும். தயவுசெய்து பொருத்தமில்லாத விடயங்களைப் பேசி காலத்தை வீணடிக்காதீர்கள், சபையை திசை திருப்பாதீர்கள்” என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், “முன்பள்ளிகள் கல்வியுடன் தொடர்புடையவை. அதனால் தான் குறிப்பிட்டேன். அவற்றை வர்த்தமானியின் ஊடாக கல்வியமைச்சுக்கு மாற்ற வேண்டும்” என்றார். அத்துடன், முன்பள்ளிகள் இராணுவத்தால் நடத்தப்படுகின்ற புகைப்படங்களையும் சபையில் சமர்ப்பித்தார்.
இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர், விடயதானத்துடன் பொருத்தமானவற்றை மட்டும் பேசுமாறு ஸ்ரீதரனுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீதரன் உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கில் தொண்டர் ஆசிரியர் நியமனங்கள் இழுபறியில் உள்ளதாகக் குறிப்பிட்டார். இதன்போது மீண்டும் குறிக்கிட்ட கல்வியமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் தவறான தரவுகளை வைத்துக்கொண்டு பேசுவதாகக் குறிப்பிட்டதுடன், அவ்வாறு செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
“தமிழை, சிங்களத்தில் மொழிபெயர்ப்பதில் பிரச்சினை இருக்கிறது. நான் பேசும் விடயம் அமைச்சருக்குத் தவறாக மொழிபெயர்க்கப்படுகின்றது. நான் சோறு கேட்டால் நீங்கள் ஜஸ்கிறீம் தரும் விதமாகச் செயற்படக் கூடாது. நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். எனக்கும் இங்கே பேசுவதற்கு சகல உரிமைகளும் உண்டு” என்றார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“இப்போது தேசியக்கொடி விடயத்தைப் பெரிதுப்படுத்திப் பேசுகிறீர்கள். வடமாகாண ஆளுநர், ஓர் அரசியல்வாதியைப் போல் நடந்துகொள்கின்றார். வடக்கில் மாவீரர் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் சப்பாத்துகளுடன் நிற்கின்றார்கள். எமக்குரிய உரிமை வழங்கப்படுவதில்லை. தேசியக்கொடியில் உள்ள சிங்கம், வாளை ஏந்திக்கொண்டு எங்களைக் கொல்ல வருவதாகவே எமது மக்கள் எண்ணுகின்றனர். அன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், தேசியக்கொடியை ஏந்தினார். எனினும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அதற்காக மன்னிப்புக் கேட்டார்.
“நீங்கள் பெரும்பான்மை தேசிய இனம். நாம் சிறுபான்மை தேசிய இனம். எமக்குரிய உரிமைகள் வழங்கப்பட்டு சமமாக மதிக்கப்படும் போதுதான் எமக்கு அந்த உணர்வு வரும். ஆகையால், சகலரையும் அணைத்துச் செல்லக் கூடிய சூழல் உருவாக வேண்டும்.
“பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரேனும் வசித்திராத நாவற்குழி, மாங்குளம், பூநகரி ஆகிய பகுதிகளில் புதிதாக விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. நிலைமை இவ்வாறு இருக்கும்போது நல்லிணக்கம் எவ்வாறு உருவாகும்? நாம் எமது தன்மானத்தை, சுயமரியாதையை விட்டு வரவு-செலவுத் திட்டத்துக்கு வாக்களித்திருக்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
43 minute ago
49 minute ago
58 minute ago