2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

களுத்துறை கொபவக தோட்ட விவகாரம்: அமைச்சர் மனோ நடவடிக்கை

Thipaan   / 2015 டிசெம்பர் 20 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்ட புலத்சிங்கள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொபவக தோட்டத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பில் நடவடிக்கைகளை  முன்னெடுத்து, தலைமறைவாகியுள்ள சமிந்த, ரன்கெட்டி, ததா ஆகிய மூன்று பிரதான குற்றவாளிகளையும் இன்று இரவுக்குள் கைது செய்யும்படி மேல்மாகாண தெற்கு பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபர் கபில ஜயசேகரவுக்கு அமைச்சர் மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைச்சரின் பணிப்புரையை அடுத்து, தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை கண்டு பிடிக்க கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் விசாரணை குழு புலத்சிங்கள பகுதிக்கு சென்றுள்ளது.

அத்துடன் அப்பகுதிக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகரையும் நேரடியாக புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் இருந்தபடி விசாரணைகளை முன்னெடுக்கும்படியும் தான் ஏற்பாடுகளை செய்துள்ளதாக பிரதி பொலிஸ் மாஅதிபர் அமைச்சருக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக புலத்சிங்கள பொலிஸ் நிலையத்தின் மற்றுமொரு குழுவும் குற்றவாளிகளை தேடி வருகிறது என புலத்சிங்கள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரேமலால் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.     

இந்நிலையில் இன்று காலை கொழும்பு அதிதீவிர சிகிச்சை பிரிவுக்கு விஜயம் செய்த அமைச்சர் மனோ கணேசன் படுகாயமடைந்த நிலையில் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்  களுத்துறை மாவட்ட கொபவக தோட்டத்தைச் சேர்ந்த விஜயன் என்பவரை நேரடியாக பார்வையிட்டார்.

அத்துடன் அங்கு கூடியிருந்த காயமடைந்தவரின் மகன் உட்பட அந்த தோட்டத்தை சார்ந்த ஏனையோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.  

இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,  

தனிப்பட்ட விபத்து ஒன்றினால்  ஏற்பட்டுள்ள விரோதத்தை, அந்த விபத்தில் காயமடைந்த நபரின் மகனும், இன்னும் சிலரும் மதுபோதையில், அந்த பகுதி தோட்டத்தை சார்ந்த தமிழ் மக்களை, இனவாத குரோத வார்த்தைகளை பாவித்து திட்டியதுடன், கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதனால் காயமடைந்த நபர் இப்போது கொழும்பு அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது ஓர் இனவாதக் கும்பலின் தாக்குதல். இதை நமது ஆட்சியில் அனுமதிக்க முடியாது. தமிழ் மக்களை குறிப்பாக களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய தோட்டப்புறங்களில் வாழும் தொழிலாள மக்களை குறி வைத்து தாக்குவது கடந்த ஆட்சி காலத்தில் பரவலாக நடைபெற்று வந்த வன்முறைகள் ஆகும்.

தனிப்பட்ட கோபதாபங்களை இப்படி இனவாதரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராக இன்ட பகுதிகளில் பழி தீர்த்துக்கொள்கின்றனர்.

இதற்கு இனிமேல் இடமில்லை. இவற்றை கண்காணிக்கத்தான் நான் இந்த அரசில்  தேசிய சகவாழ்வுக்கு பொறுப்பான அமைச்சராக இருக்கின்றேன். 

கடந்த காலத்திலும், இதே காடையர் குழுவினர், களுத்துறை மாவட்ட கொவின்கந்த என்ற தோட்டத்திலும் தமிழர்களை குறி வைத்து தாக்கியுள்ளனர்.

அவ்வேளையில் பொலிஸ் உரிய நடவடிக்கை எடுத்து இருந்திருந்தால், இன்று இத்தகைய ஓர் அசம்பாவிதம் நடந்த இருக்காது என மேல்மாகாண தெற்கு பிராந்திய பிரதி பொலிஸ் மாஅதிபர் கபில ஜயசேகரவிடம் நான் இன்று கூறியுள்ளேன்.

இந்த பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரேமலால் தனது கடமையை ஒழுங்காக செய்யவில்லையா என்பதை நான் இப்போது விசாரித்து வருகிறேன். இவருக்கு எதிராக சான்றுகள் கிடைக்குமானால், இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்போது தலைமறைவாகியுள்ள சமிந்த, ரன்கெட்டி, ததா ஆகிய நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைப்பின் அதை உடனடியாக எனது அல்லது எமது களுத்துறை மாவட்ட பிரதான செயலாளர் சிவராஜாவின் கவனத்துக்கு கொண்டுவரும்படி பொதுமக்களை கோருகிறேன் என்றார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X