2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கொழும்பில் மகாத்மா காந்திக்கு கருங்கல் சிலை

Editorial   / 2025 ஜூலை 04 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக சேவைகளில் ஈடுபடும் பலரின் செயற்பாடுகள் பற்றி வெளிச்சத்துக்கு வருவது குறைவாக இருக்கிறது. எனினும், அவ்வாறான சிறு,சிறு குழுக்களின் உதவிக்கரங்களைக் கேட்கும் போது, இவ்வளவு சிறிய குழுவால் இந்த பெரிய உதவிகளைச் செய்யமுடியுமா? என மூக்கில் விரலை வைத்துச் சிந்திக்கவும் தூண்டியிருக்கிறது.

சமூகப் பணி என்பது உள் மனதில் இருந்து உதிக்க வேண்டிய ஒரு பண்பாகும். இல்லையேல், என்னதான் நினைத்தாலும் பொதுப்பணியை செய்யவே முடியாது. நாம் உண்டு நமது வேலை உண்டு என நினைத்துக் கொண்டிருக்கும் பலரும் இருக்கும் சமூகத்தில், ஏதாவது ஒரு சில உதவிகளையாவது செய்துகொண்டிருக்கும் சிலரும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கொழும்பு, முகத்துவாரம் (மோதரையில்) இயங்கும் பொதுப்பணி மன்றம் பற்றி, முகத்துவாரத்தைச் சேர்ந்த பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள், அந்த மன்றத்தின் ஊடாக வழங்கப்படும் உதவிகளை பெற்றிருப்பீர்கள், சமூக சேவைகளில் இணைந்து அவர்களுக்கு கரங்கொடுத்தீர்ப்பீர்கள்.

அந்த மன்றம், கொழும்பில், கருங்கல்லினால் ஆன முழு சிலையை, மகாத்மா காந்திக்கு வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்பது பலருக்கும் தெரியாது. அந்த வகையில், பொதுப் பணி மன்றத்தின் தலைவர் ஏ.ஜோசப் (வயது 68) எனது நிறுவனத்திற்கு வருகை தந்தார். அவருடனான கலந்துரையாடலில், ச்சா, இப்படியெல்லாம் செய்திருக்கின்றார்கள். என எண்ணத் தோன்றியது.

எதிர்கால திட்டங்களைக் கேட்டால், இந்த ஒரு சிறு குழுவின் முயற்சிக்கு உண்மையில் பரோபகாரிகள் தங்கள் இயன்ற ஒத்துழைப்பை நல்கவே வேண்டும் அவர்களின் முயற்சிக்கு வாழ்த்து  தெரிவிக்கும் அதே நேரத்தில், இவ்வாறான நல் உள்ளங்கொண்ட உதவி கரங்களை நீட்டுவோருக்கு இயன்றளவு ஒத்துழைப்பது எமது கடப்பாடாகும் என நினைக்கின்றோம்.

இந்த பொதுப்பணி மன்றம் 1977ஆம் ஆண்டு முதல் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.. கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை முதன்மை பணியாக கொண்டிருக்கும் இந்த மன்றம், புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப்பொதுத் தராதார சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பரீட்சார்த்திகளுக்கு முன்னோடி கருத்தரங்குகளை நடத்தி வருகின்றது.

கொழும்பு முகத்துவாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவ்வாறு இலவச கருத்தரங்குகளை நடத்துவதாக,  பொதுப்பணி மன்றத்தின் தலைவர்  ஜோசப் ​பகிர்ந்துகொண்டார்.

ஐவரடங்கிய குடும்பமாக இருந்தாலும், தன்னுடைய மூன்று பிள்ளைகளும் திருமணம் முடித்து தனிக்குடித்தனம் சென்று விட்டனர். என்னுடைய மனைவி நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருக்கிறார். எனினும், சமூக பணியை தான் கைவிடவில்லை என்றார்.

அந்த பிரதேசத்தில் பாடசாலைக்கு செல்லும், ஏழ்மையான மாணவர்களை இனங்கண்டு, அவர்களுக்கு புத்தக பைகள், அப்பியாச கொப்பிகளை வழங்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்துடன், இலவசமாக மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகின்றன. கண்தானம், இரத்ததானம் ஆகிய முகாம்களுக்கு ஆட்களை திரட்டி செல்லும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

பசுமை புரட்சி எனும் திட்டத்தின் கீழ், அப்பிரதேசத்தில் மரக்கன்றுகளை நாட்டும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன என தெரிவித்த அவர், கரையோர பிரதேசங்களில் பொலித்தீன், பிளாஸ்டிக் போன்ற மக்காத கழிவுகளை அகற்றும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன என்றார்.

பாடசாலைக்கு செல்லாதவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும், 1983ஆம் ஆண்டு ஜூலை கலவரத்துக்குப் பின்னர், சமூக பணிகளை முறையாக முன்னெடுக்க முடியவில்லை என மனந்தொந்து கொண்டார். எனினும், அப்பணிகளை மீளவும் ஆரம்பித்திருப்பாதால் பெரும் மகிழ்ச்சியை அடைந்தார்.

1983ஆம் ஆண்டுகளுக்கு முன்னர், மகாத்மா காந்தி பொது மன்றம், ஐக்கிய பொது பணி சம்மேளனம் உள்ளிட்ட பல பொது மன்றங்களை, களுத்துறை, மாத்தளை, நீர்கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் முன்னெடுத்ததாக நினைவுகூர்ந்த அவர்,  மகாத்மா காந்தி,  1927ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்து, ஜிந்துப்பிட்டி ராம்லால் மகாராஜா தர்ம சத்திரத்தில் தங்கியிருந்தார் என்றார்.

அதனை நினைவு கூர்ந்து, கருங்கல்லிலான முழுச்சிலையை நிர்மாணித்து,  ஜிந்துப்பிட்டி ராம்லால் மகாராஜா தர்ம சத்திரத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து உள்ளதாகவும். அச்சிலையை இந்தியாவில் இருந்தே தருவிக்க வேண்டும் என்றார்.

மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்த 100 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவுகூர்ந்து, நூற்றாண்டு விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு பொதுப்பணி மன்றத்தின் ஊடாக நடவடிக்கைகளை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

தலைமன்னார் ஊடாக அழைத்துச் சென்று இந்தியாவிற்கு அனுப்பி வைத்த போதும், கொழும்பு கோட்டையில் ஒலித்த மரண ஓலங்கள் தன்னுடைய காதுகளில் இன்னும் ஒலிக்கிறது எனத் தெரிவித்த அவர், கொழும்பில் மட்டுமன்றி நகரங்களில் வாழும் பொருளாதார ரீதியில் நலிவடைந்து இருக்கும் இந்திய வம்சாவளி மக்களுக்கு உதவ வேண்டும் என்ற ஏக்கத்தையும் பகிர்ந்துகொண்டார்.

கடவுள்

சிலருக்கு வசதியை தருவார்.
சிலருக்கு அறிவை தருவார்.
சிலருக்கு புகழை தருவார்.

ஆனால்,

வெகு சிலருக்கு தான்
தன்  மனதை தருவார்
அவர்களே!
உதவும் குணம் உள்ளவர்கள்
அவர்களே!
நம்மோடு வாழும் கடவுள் என்பார்கள்
.

அதற்கமைய பொதுப்பணி மன்றத்தின் பணிகள் சிறப்புற வேண்டும். அந்த மன்றத்தின் தலைவர் உள்ளிட்ட ஏனைய செயற்பாட்டு உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்களின் சமூக பணிகள் நீடி நிலைத்து செல்ல வேண்டும் என வாழ்த்தி, பரோபகாரிகள் தங்கள் இயன்ற வரையில் உதவிசெய்து, கருக்கலிலான மகாத்மா காந்தியின் முழு சிலையை கொழும்பில் நிர்மாணிப்பதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பதே எமது அவாவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .