Niroshini / 2021 மே 13 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தடுப்பூசிகள் பற்றி ஆய்வு செய்துகொண்டிருக்காது, கிடைக்கின்ற தடுப்பூசியைச் செலுத்தி, கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்புப் பெறுமாறு, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் தலைவர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி, வாசனையை அறிந்துகொள்ள முடியாமற்போதல் போன்றன, கொரோனா வைரஸ் தொற்றுக்கான பிரதான அறிகுறிகள் என்றும் இவ்வறிகுறிகள் காணப்பட்டால், உடனடியாக சுகாதாரத் தரப்பினருக்கு அறிவிக்குமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் தற்போது பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ் தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் பேராசிரியர், கொரோனாவை கட்டுப்படுத்தக்கூடிய பயன்மிகு ஆறு வழிமுறைகளையும் அறிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புக்கு எதிரான தடுப்பூசிகள் கிடைக்கப்பெறுமாயின், அவை கிடைக்கும் மறுகனமே செலுத்திக்கொள்ள வேண்டும், முகக்கவசங்களை முறையாக அணிந்துகொள்ளல், ஆறு அடி சமூக இடைவெளியைப் பேணல், கைகளை, சவர்க்காரம் அல்லது கை கழுவும் திரவத்தைக் கொண்டு, முறையாகக் கழுவுதல், மக்கள் நடமாட்டம் அதிகமாகவுள்ள இடங்களில் நடமாடுவதைத் தவிர்த்தல், அத்தியாவசியக் காரணத்துக்காகப் பிரிதோர் இடத்துக்குச் செல்லவேண்டி ஏற்பட்டால், 15 நிமடத்துக்குள் அவ்விடத்திலிருந்து வெளியேறல் போன்ற நடைமுறைகளை, பொதுமக்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டுமென்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சந்தேகத்துக்குரிய நோய் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், உடனடியாகப் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்வதோடு, குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சற்று விலகியிருக்க வேண்டுமென்றும், பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்த நாட்டுக்குள் பயன்பாட்டிலுள்ள தடுப்பூசிகள், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு உகந்தவை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைக்கு இந்தக் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு உள்ள ஒரே வழிமுறை தடுப்பூசி என்பதால், அதனைச் செலுத்திக்கொள்ளத் தயங்க வேண்டாமென்றும் வலியுறுத்தியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .