2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘கைதுசெய்யப்பட்டமை கண்துடைப்பு’

Niroshini   / 2018 பெப்ரவரி 07 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைமுறி விவகாரம் தொடர்பிலான சந்தேகநபர்களுக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு வழங்கி வருகிறார் எனத் தெரிவித்த ​ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாக்க, இவ்விவகாரம் தொடர்பில் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிஹேன கைதுசெய்யப்பட்டமை வெறும் கண் துடைப்பு நாடகமே எனவும் குறிப்பிட்டார்.  

தொடர்ந்தும் இது தொடர்பில் குறிப்பிட்ட அநுரகுமார திஸாநாக்க எம்.பி,  

“மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பில் பிரதமரிடத்தில் நம்பகத்தன்மையான பதிலை இதுவரை எதிர்பார்க்க முடியாதுள்ளது. இறுதிச் சந்தர்ப்பத்தில் எதுவும் செய்ய முடியாத ஓர் இக்கட்டான சூழ்நிலையின்போதே, ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பல முடிவுகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.  

“மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், இவ்விகாரத்தில் தொடர்புபடவில்லை எனவும் இது உண்மைக்குப்புறம்பானது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். இதில், மகேந்திரனை பிரதமரே காப்பாற்றி வருகின்றார் என்பது தெளிவாகிறது.

“அர்ஜுன மஹேந்திரனால் மேற்கொள்ளப்பட்ட கொடுக்கல்- வாங்கலின் போது, சுமார் 68,000 மில்லியன் ரூபாய் அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதை அவரிடம் இருந்து அரசாங்கம் அறவிட வேண்டும்.  

“மேலும், பிட்டிபன குழு சிக்கலற்ற குழு என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார். பிணைமுறி விவகாரம் தொடர்பிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைய, இந்தக் குழு பாரிய நிதி மோசடிகளை விசாரணை செய்யும் அளவுக்குத் தகுதியற்றது எனவும் அதற்கான தகுதி, அந்தக் குழுவிடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.  

“பிரதமர் தலைமையில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டும் குற்றவாளிகளைப் பிரதமர் பாதுகாக்கின்றார். இந்நிலையில், ஆணைக்குழுக்களால் முன்னெடுக்கப்படும் விவகாரம் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிறுவனங்கள், கொண்டுவரப்பட்ட சட்டங்கள் அனைத்தும் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன.  

“ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய, முக்கியமான காலகட்டங்களில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் எழுகின்றது. ​மொத்தமாக 34 சம்பவங்களுக்கு எதிரான விசாரணைகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

“பங்குச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட கேம் தொடர்பிலான விசாரணை நீதியாக நடைபெறும் என நம்பினோம். ஆனால், அந்நம்பிக்கை பொய்யாகிவிட்டது. மேற்படி 34 சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் 317 கோடியே 24 இலட்சம் ரூபாய பணம், வீண்விரயம் செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.  

“மேலும், நாடாளுமன்றம் தண்டனை வழங்கும் இடமாக செயற்படக்கூடாது. இது நீதிமன்றம் இல்லை. நாடாளுமன்றத்தில் சட்டங்கள் நிறுவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமே ஒழிய, சட்டத்தை கையில் எடுத்து தண்டனை வழங்கும் இடமாகச் செயற்படக்கூடாது. கடந்த காலங்களில் இவ்வாறு செயற்பட்டதற்கான பல சம்பவங்களை நினைவுப்படுத்திப் பார்க்கலாம்” எனக் குறிப்பிட்டார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .