2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

சிங்கப்பூர் போன்ற இறுக்கமான சட்டம் வேண்டும்: ஜனாதிபதியிடம் ரிஷாட் வலியுறுத்தல்

Editorial   / 2025 நவம்பர் 23 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக, இனவாதம் மற்றும் மதவாதங்களை கையிலெடுக்கும் மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக  இறுக்கமான சட்டத்தை நடைமுறைபடுத்த  தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள  வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அனுரகுமார திஸ்ஸாநயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தினால் இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு ‘இலங்கையர் தினம்’ எதிர்வரும் டிசம்பர் மாதம் 12,13,14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிகழ்வு பற்றிய  சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் சனிக்கிழமை (22)  இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இனவாதம், மதவாதம் ஊடாக நாட்டை குழப்பும் சக்திகளால் தான் இந்நாடு இன்னும் பொருளாதார வீழ்ச்சியை கண்டிருக்கின்றது.   இலங்கை சுதந்திரமடையும்  போது தனிநபர் வருமானம் 48 டொலர்,  ஆனால் அன்று ஜப்பானின் தனிநபர் வருமானம் 49 டொலர், ஆகவே ஜப்பானை விட ஒரு டொலர் வித்தியாசத்தில் தான் அன்று இருந்தோம், இலங்கையையும் ஜப்பானையும் ஒப்பிடும் நாம் இன்னும் பொருளாதார வீழ்ச்சியைதான் சந்தித்திருக்கின்றோம், நமது நாடு இனவாதத்தினால் தான்  குட்டிச்சுவராகி அதள பாதாளத்திற்குச் சென்றிருக்கின்றது.

ஆகவே, இனவாதம் மதவாத்தை பேசும் எந்த நபராக இருந்தாலும் அவருக்கு எதிரான சட்டத்தை மிகவும் இறுக்கமாக நடைமுறைப்படுத்த  வேண்டும். சிங்கப்பூரில் இருப்பது போன்ற ஓர் சட்ட மாற்றத்தை நாம் அவசரமாக கொண்டுவர வேண்டும், அதற்கு நாம் பூரண ஆதரவுகளை வழங்குவோம்.

அத்துடன் முஸ்லிம், தமிழ், சிங்கள மற்றும் கத்தோலிக்க  என ஒவ்வொரு மார்க்கத்திற்கான சந்தேகங்களை தீர்ப்பதற்கு அல்லது தெளிவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை ’இலங்கையர் தினம்’ நாளில் மேற்கொள்ள அந்தந்த இன ரீதியான தினைக்களங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

அரசினால் முறைப்படுத்தப்படவுள்ள  “இலங்கையர் தினம்” என்ற தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குவதாகவும் தெரிவித்தனர்.

இக்கலந்துரையாடலின் போது, பாராளுமன்ற உறுப்பினர்களான கோடீஸ்வரன், ஹிஸ்புல்லாஹ், மனோ கணேசன், செல்வம் அடைக்கலநாதன், ரவீகரன், மஸ்தான், திகாம்பரம், வைத்தியர் அர்ச்சுனா, மஸ்தான் மற்றும் சிறிநாத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X