Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Kogilavani / 2017 ஜூன் 23 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணத்தில் முன்னர் இயங்கிய சப்றா என்ற நிதிக்கம்பனி தொடர்பில், விசாரணையை நடத்தவேண்டுமென, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நிலையியற் கட்டளையின் கீழ், வடக்கில் மோசடிகளில் ஈடுபடும் சில நிதி நிறுவனங்கள் தொடர்பில் கேள்வியொன்றைக் கேட்டபோதே, டக்ளஸ் எம்.பி மேற்கண்ட விவகாரம் தொடர்பிலும் பிரஸ்தாபித்தார்.
கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமே மேற்படி கேள்வியைக் கேட்டிருந்தார். அக்கேள்விக்கு, பிரதமருக்குப் பதிலாக, பதிலளித்த இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா, இந்த விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று பதிலளித்தார்.
இதேவேளை, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, இந்த நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதன் பின்னணி என்னவென்று, நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், அவர் வினவினார்.
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைதீவு, வவுனியா, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில், எல்லையோரக் கிராமங்களிலும், மிகவும் பின்தங்கிய கிராமங்களிலும் உள்ள பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும் வருமானம் குறைந்த குடும்பங்களை இலக்கு வைத்தே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற 46 வரையிலான நிதி நிறுவனங்களில், சுமார் 30 வரையிலான நிதி நிறுவனங்கள் அதிக வட்டி, கூடிய கடன்களை வழங்கி, அதனை வாராந்த அடிப்படையில் அறவிட்டு வருவதாக அறியமுடிகின்றது.
இந்தக் கடன் வசதிகள் குறித்து விழிப்புணர்வுகள் எதுவும் இல்லாத அப்பாவி மக்கள் குறிப்பாக, பெண்கள் கடனைப் பெற்று அவற்றைத் திருப்பிச் செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரியவருகிறது.
கடந்தகால யுத்தம் மற்றும் தொடர் இயற்கைப் பாதிப்புகளால் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டிருக்கின்ற மக்கள் முன் இவ்வாறான கடன் திட்டங்களை வலியவே சென்று வழங்குவதும், பின்னர் அவற்றைத் திருப்பிப் பெற இரவு, பகல் பாராது அம்மக்களிடம் சென்று அவர்களைப் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாக்கி வருவதுமான ஒரு நிலைப்பாட்டை இந்த நிதி நிறுவனங்கள் மேற்படி பகுதிகளில் முன்னெடுத்து வருவதாக மக்கள் பகிரங்கமாகவே குறை கூறி வருகின்றனர்.
அதே நேரம், பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு, வாழ்வாதார வாய்ப்புகளற்ற மக்களைக் குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களையே இவ்வாறான நிதி நிறுவனங்கள் இலக்கு வைப்பதிலிருந்து, இதன் பின்னணி குறித்தும் எமது மக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இத்தகையதொரு நிலையில் கடனை மீளச் செலுத்த முடியாத காரணத்தால், இத்தகைய நிதி நிறுவனங்களது கெடுபிடிகள் தாங்காத நிலையில் வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் அண்மையில் ஒரு தாய் தனது குழந்தையுடன் கிணற்றில்குதித்துதற்கொலை செய்த சம்பவமும், முல்லைதீவு, விஸ்வமடு பகுதியில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்த நிதி நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்ற இத்தகைய செயற்பாடுகளின் நியாயத்தன்மை குறித்து விளக்குமாறும், இந்த நிதி நிறுவனங்கள் வழங்கும் கடன் தொகைகளுக்கான நிபந்தனைகள், வட்டி விகிதாசாரங்கள் என்ன வகையில் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கடன் திட்டங்களை வழங்கும் முன் இந்த நிறுவனங்கள் உரிய திட்டம் குறித்து கடன் பெறும் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தாது ஏன்? என்றும், இத்தகைய நிதி நிறுவனங்களால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளிலிருந்து எமது மக்கள் விடுபடுவதற்குரிய மார்க்கங்கள் யாவை? என்றும் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியிருந்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
2 hours ago
2 hours ago
11 May 2025