2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சம்பள நிலுவை வழங்காமைக்கு சுரேஷ் எம்.பி கண்டனம்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்காததையிட்டு, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பில், அச்சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

“தோட்டத் தொழிலாளர்களின் நிலுவைச் சம்பளம் தொடர்பில், சில தொழிற்சங்கங்கள், பிழையான தகவல்களை வழங்கி வருகின்றன. எமது தொழிற்சங்கத்துக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனை மாசுபடுத்தும் வகையில் தகவல்கள் வெளியிடப்படுகின்றன.  

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில், கடந்த ஒன்றரை வருடத்துக்கு மேலாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள், 21 தடவைகள் இடம்பெற்றுள்ளன.  

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான் பதவி ஏற்றபின்னர், இதுவரையில், 3 தடவைகள் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்டுள்ளேன். ஏனைய 19 பேச்சுவார்த்தைகளிலும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸே கலந்துகொண்டது.  

அக்கட்சி, தொழிலாளர்களின் நிலுவைச் சம்பளம் ​தொடர்பாக ஏதும் ஆலோசிக்காது, மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி, ஆர்பாட்டங்களை நடத்தி வருகின்றது. 1,000 ரூபாயைப் பெற்றுத் தருகிறோம் என்று, அரசியலுக்காக பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டுவிட்டு, இப்போது சாக்குபோக்கு கூறுவதில், எவ்வித நியாயமுமில்லை.  

இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பாகத் திகழும் தோட்டத் தொழிலாளர்களின், சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தம், நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது. இதில், அடிப்படைச் சம்பளம் 500 ரூபாய், விலைகேற்ப நிரந்தரக் கொடுப்பனவு 30 ரூபாய், உற்பத்தி திறன் கொடுப்பனவு 140 ரூபாய், வரவுக்கான கொடுப்பனவு 60 ரூபாய் எனவும், அதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன சேர்க்கப்பட்டு 805 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .