Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 17 , பி.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
சர்வதேச நிபுணத்துவத்தினது உதவியுடனும் ஆலோசனையுடனும் கூடிய உள்ளூர்ப் பொறிமுறைகள், எதிர்வரும் ஜனவரி முதல் (தை மாதம்) ஆரம்பிக்கவுள்ளதாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறிதல், நீதிக்கான உரிமை, நிவாரணத்துக்கான உரிமை, மீள இடம்பெறாதிருத்தல் ஆகிய நான்கு நிலைகளைக் கொண்ட உள்ளூர்ப் பொறிமுறைகள், பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் கொண்டு நடாத்தடுமெனவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேற்கொள்ளப்படவுள்ள உள்ளூர்ப் பொறிமுறைகளுக்கு வெளிநாட்டு உதவிகள் பெறப்படுமென்பதை உறுதிப்படுத்திய அமைச்சர், எவ்வாறான உதவிகள் பெறப்படுமெனக் கேட்கப்பட்டபோது, அது தொடர்பில் ஆலோசனைக் கூட்டங்கள் இடம்பெறுமெனவும், அவற்றின் போது உதவிகளின் வகைகள், அவற்றின் அளவுகள் குறித்த முடிவுகள் பெறப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். உதாரணமாக, தடயவியல் சார்ந்த பகுதிகளில், இலங்கைக்கு வெளிநாடுகளின் நிபுணத்துவம் தேவைப்படுமென எண்ணுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகள் ஜனவரியில் ஆரம்பிக்கவுள்ள போதிலும், அதற்கு முன்னதாக இடம்பெறவுள்ள ஆலோசனைகள் மிக முக்கியமானவையாகவும் முதலாவதாக உள்ளனவாகவும் காணப்படுகின்றன என எண்ணுவதாகத் தெரிவித்த அமைச்சர் மங்கள, ஒக்டோபர் முதல் ஆலோசனைகள் இடம்பெறும் எனவும், அடுத்தாண்டு ஜனவரி இறுதிவரை அவை இடம்பெறுமெனவும், அதன் பின்னர் விசாரணைப் பொறிமுறைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
நான்கு மட்டத்திலான குறித்த பொறிமுறைகளை, 18 மாதங்களில் பூர்த்தி செய்ய எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த அமைச்சர் மங்கள, அதற்கான வாக்குறுதியை மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையை, மிகவும் சமநிலையான நோக்கைக் கொண்ட அறிக்கையெனத் தெரிவித்த அமைச்சர், நல்ல நோக்கத்துடனான அறிக்கையெனத் தெரிவித்த அவர், அதை ';நன்றாக வரையப்பட்ட, நிதானமான அறிக்கை' என விபரித்தார்.
குறித்த அறிக்கையானது ஒரு குற்றவியல் விசாரணையின் பின்னரான அறிக்கையல்ல என்ற அமைச்சின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அமைச்சர், போதுமான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றால், குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்கள சமூகங்களுக்கிடையிலான நம்பிக்கையீனத்தைக் குறைப்பதென்பது, இவ்வாறான பொறிமுறைகள் எல்லாவற்றையும் விட மிகவும் உடனடியான தேவையாக உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், சுதந்திரத்தின் பின்னரான பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்த நம்பிக்கையீனமென்பது அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். அத்தோடு, சம்பந்தப்பட்ட தரப்புகளின் நம்பிக்கைகளை மீண்டும் கொண்டுவருவதற்கு, நிறுவனங்களை உருவாக்க எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊடகச் சந்திப்பின் ஆரம்பத்தில், கடந்த அரசாங்கத்தினது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த அமைச்சர் மங்கள, கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்கும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பரிந்துரையை 'இலங்கைக்கான அவமானம்' என வர்ணித்த நாமல் ராஜபக்ஷவை 'நாமல் பபா' என விமர்சித்த அமைச்சர், சட்டப் பரீட்சைகளை அவர் எவ்வாறு எழுதினார் எனக் கேள்வியெழுப்பியதோடு, நீதித்துறை மீதான நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியது, கடந்த அரசாங்கமே எனவும் குறிப்பிட்டார்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் தொடர்பாக சில விசாரணைகள் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஊடகவியலாளர் எக்னெலிகொடவின் காணாமல் போனமை தொடர்பான விசாரணைகள் முடிவுக்கு வந்துகொண்டிருப்பதாகவும், ஒரேயொரு சந்தேகநபர் மாத்திரமே விசாரணை செய்யப்பட வேண்டியிருப்பதாகவும் தெரிவித்ததோடு, கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலை தொடர்பான விசாரணைகள் ஏறத்தாழ பூரணமடைந்துள்ளதாகவும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பான விசாரணைகள் விரைவில் பூர்த்தியடையும் எனவும் குறிப்பிட்டார். வெள்ளை வேன் விவகாரத்திலும், இரண்டு சாட்சிகளினது வாக்குமூலத்துடன் பூர்த்தியடையுமென எண்ணுவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறான விடயங்களுக்குக் காரணமானவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுமெனத் தெரிவித்த அவர், அதை விட முக்கியமாக, இவற்றுக்கு யார் உத்தரவு வழங்கியது என்பதைக் கண்டறிய விரும்புவதாகத் தெரிவித்தார். இலங்கையானது எப்போதும் ஒழுக்கசீலமான, தொழில்முறையான இராணுவத்தைக் கொண்டிருந்த நிலையில், இவ்விவகாரங்களுக்கு உத்தரவை வழங்கியவர்களைக் கண்டறிவது முக்கியமானது எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
17 May 2025