2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

’சர்வதேச நீதிமன்றை ஏற்கமுடியாது’

Editorial   / 2019 மார்ச் 26 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையால் இலங்கைக்கு ஏற்படவிருந்த பேராபத்தை தடுத்து நிறுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், சர்வதேச விசாரணைக்கு இலங்கையில் இடமில்லை என்றார்.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நேற்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க பதவியேற்கும்போது, இராணுவத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், குறித்த இராணுவ வீரர்களுக்கு எதிராக சிவில், இராணுவ சட்டங்களின்படி தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுமென உறுதியளித்திருப்பதாகவும் அதே நிலைப்பாட்டில் அவர் தற்போதும் இருப்பதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்சலட்டின் அறிக்கையில், 'கொசிப் இணையத்தளங்களில்' பெற்றுகொள்ளப்பட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமான நிலப்பரப்பு காணப்படுவதால் அதிகளவான இராணுவ முகாம்கள் காணப்படுதாகவும் கூறினார்.

இலங்கையின் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான சர்வதேசத்தின் பரிந்துரைகளை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், எனினும், எந்ததெந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதென தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு மாத்திரமே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 

வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலிக்கும் 75 சதவீதமான காணிகளே விடுக்கப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்சலட்  தெரிவித்திருக்கும் கருத்து தவறெனக் கூறிய அவர், இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த 92 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதென்றார்.
வடக்கில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, தேசிய அடையாள அட்டை, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இல்லை எனத் தெரிவித்த அவர், தான் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர், குறித்த ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக விசேட காரியாலயங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் 83 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வாழ்வதாக கூறிய அவர், இதில் 23 ஆயிரம் பேருக்கு பிரஜாவுரிமை பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், இவர்களை மீள வடக்கில் குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக தான் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளேன் என்றார்.

இலங்கையில் நடைபெற்றது சிவில் யுத்தமெனத் தெரிவித்த அவர், தமிழீழ விடுதலை புலிகள், இராணுவத்தினர் என இரு தரப்பினர் மீதும் யுத்தக் குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும், இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை. உள்நாட்டு நீதிமன்றங்களே அதனை விசாரணை செய்ய முடியும்.

யுத்தக் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான சுயாதீனத்தன்மையும் இயலுமை, நமது நாட்டு நீதித்துறைக்கு இருப்பதாகவும், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதிக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மிச்சல் பச்சலேட்டின் அறிக்கை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர், இலங்கைக்கு அனுப்பட்டதாகவும் எனினும், பிரதமர் அலுவலகம் அதனை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தவில்லை எனவும் குற்றஞ்சுமத்தினார்.

வடமாகாணத்தின் உண்மையான நிலவரத்தை காண,  புலம்பெயர்ந்துள்ள தமிழ்ர்கள் மீண்டும் வடக்குக்கு வர வேண்டுமென அழைப்பு விடுத்துள்ள அவர், வடக்குக்கு வருவதற்கான வசதிகளையும் தான் செய்துகொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கலப்பு நீதிமன்றம் தொடர்பில் நாடாளுமன்றில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கருத்துக்கள் சட்டத்துக்குட்பட்டவையா என அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

தேசப்பாதுகாப்பு காரணங்களுக்காக இராணுவ முகாம்கள் அமைந்துள்ள காணிகளுக்கு, அக்காணிகளின் உரிமையாளர்களுக்கு சந்தைப்பெறுமதியை விட அதிகளவான பணம் கொடுக்கப்பட வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .