Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2017 நவம்பர் 01 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிர்ஷன் இராமானுஜம்
“புதிய அரசமைப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டையும், சர்வமத மாநாட்டையும் புத்திஜீவிகள் மாநாட்டையும் கூட்டப்போவதாக இன்று அறிந்தேன். இது, எமது தீர்வுத்திட்டம் தொடர்பிலான இழுத்தடிப்பா என்ற சந்தேகம் எழுகிறது. இது இழுத்தடிப்பாக இருக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் நேற்று (31) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கு, வழங்கிய உறுதி மொழிகளை நினைவுபடுத்த வேண்டும். தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வுகளை வழங்கத் தவறினால், தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களின் நம்பிக்கையை இழக்கக் கூடும். அதுமாத்திரமல்லாது சர்வதேசத்தின் நம்பிக்கையையும் இழந்து இலங்கை பெற்றுக்கொண்டிருக்கும் பல்வேறு அனுகூலங்களையும் இழக்கக் கூடும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“இங்கே முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையானது, முக்கியமான அரசியல் திட்டத்தை நிறைவேற்ற முன்னோடியாக பல கட்சிகளின் எண்ணங்கள் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள, நாம் இணங்கும்,இணங்காத விடயங்களைக் கொண்டுள்ளதாகும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இதை வைத்துக்கொண்டு, நாட்டைப் பிளவுபடுத்தப் போவதாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இன்று ஜி.எல். பீரிஸ் போன்றோர், கொள்கையற்றவர்களாக, இலக்கற்றவர்களாகப் பேசுகிறார்கள். ராஜபக்ஷ காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள், போர்க் குற்றங்களை மூடி மறைப்பதற்காக, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படுவதை இனவாதமாக சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.
இதற்கு பௌத்த மத பீடங்கள் கூட எதிர்ப்பு தெரிவிப்பதையும் நாம் காண்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஊழல், மோசடிகளுக்கு எதிராக வாக்களித்த எமது மக்கள், முழுமையான தீர்வுத் திட்டமாக இல்லாவிட்டாலும் நாம் ஒன்றுபட்டு, வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசமாக தன்னாட்சி சுயாட்சி என்பதை மனதில் வைத்துக்கொண்டு வாக்களித்துள்ளார்கள். இந்த வேளையில் நாம் முஸ்லிம்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். நாம் முஸ்லிம்களுடன் இணைந்து பயணிக்கத் தயாராக இருக்கிறோம். கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு நாம் ஆதரவு கொடுத்தோம். எமது கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், திருகோணமலையில் கேட்டுக்கொண்டதற்கிணங்க அன்று முஸ்லிம் மக்களோடு ஒற்றுமையாக செயற்பட்டோம்.
இடைக்கால அறிக்கையில் எமக்கு முழுமையான திருப்தி இல்லாவிட்டாலும் நல்ல விடயங்கள் உள்ளன” என்றார்.
“சமஷ்டியில், அதிகாரம் பகிரப்பட்டதாக, வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுடன் இணைந்ததான ஆளுகைக்கு உட்பட்டதாக அமைய வேண்டும் என நாம் கோரிக்கை முன்வைத்துள்ளோம். புதிய அரசமைப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டையும், சர்வமத மாநாட்டையும் புத்திஜீவிகள் மாநாட்டையும் கூட்டப்போவதாக இன்று அறிந்தேன். இது, எமது தீர்வுத்திட்டம் தொடர்பிலான இழுத்தடிப்பா என்ற சந்தேகம் எழுகிறது. இது இழுத்தடிப்பாக இருக்கக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“நாம், சமஷ்டி என்ற வார்த்தையைப் பிரயோகிக்கிறோம். அதனை உபயோகிப்பது பிரச்சினையென்றால் பரவாயில்லை. ஆனால் சமஷ்டியின் அடிப்படையிலேயே அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். வழங்கப்பட்ட அதிகாரங்களை மீளப்பெற முடியாது. அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, காணி அதிகாரத்தை வழங்க முடியாது என்று கூறியதாக நான் பத்திரிகைகளில் பார்த்தேன். அவர் அவ்வாறு கூறியிருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது. நாம் அதற்கு ஒத்துப்போக முடியாது. நாம் இந்த அறிக்கையை நிராகரிக்கவில்லை. முழுமையாக கலந்துரையாடி முன்செல்லத் தயாராக இருக்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago