2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சி.ஐ.டியில் இன்று ஆஜராவார் ஜாலிய

Kogilavani   / 2017 ஜூலை 12 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான ஜாலிய விக்ரமசூரிய, குற்றப்புலனாய்வு பிரிவில், இன்று(12) காலை ஆஜராகுவார் என்று அவருடைய சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.   

இன்று காலை 9 மணிக்கு, குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் வழங்குமாறும் நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவுக்கு அமைவாகவே அவர், இன்றையதினம் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்றும் அவருடைய சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.  

இதேவேளை, கண்களைப் பரிசோதனை செய்வதற்காக, அமெரிக்க ஜோர்ஜியானு மாகாணத்துக்குச் செல்வதற்கு, அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரான ஜாலிய விக்ரமசூரியவுக்கு, கடும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது.   

அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக காரியாலயத்துக்கு, காணியொன்றை கொள்வனவு செய்யப்பட்டபோது, 2,50,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்தார் என்று முன்னாள் தூதுவரான ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன், அவருடைய கடவுச்சீட்டும் நீதிமன்றத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.   

இந்த வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோது, முறைப்பாட்டாளர் சார்பில், நிதிக்குற்ற விசாரணைப்பிரிவின் பொலிஸ் அதிகாரி சஞ்ஜீவ பெர்னாண்டோ ஆஜராகியிருந்தார். பிரதிவாதியின் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ ஆஜராகியிருந்தார்.   

கண்களுக்கு, தேசிய கண் வைத்தியசாலை அல்லது இந்த நாட்டில் உள்ள வேறெந்தவொரு வைத்தியசாலைகளிலும் மருந்து எடுத்துகொள்வதற்கான வசதிகள் இருக்கின்றதா என்று, பிரதிவாதியான ஜாலிய விக்ரமசூரியவிடம் கேட்ட நீதிமன்றம், தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் கண அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் இருவரிடமிருந்த பெற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையை கவனத்தில் கொண்டதன் பின்னரே, அவருக்கு அனுமதியளித்தது.   

சந்தேகநபரின் விருப்பத்தேர்வின் அடிப்படையில், கண்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு நல்லதென சுட்டிக்காட்டிய நீதிமன்றம், இம்மாதம் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி வரை, எட்டு வாரங்களுக்கு வெளிநாட்டுக்கு செல்வதற்கு அனுமதியளிப்பதாக அறிவித்தது.   

அதனடிப்படையில், 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகள் மற்றும் சந்தேகநபரின் பெயரில் உள்ள காணியுறுதிப்பத்திரத்தை சான்றுப்படுத்தி, அதனையும் பிணையாக நீதிமன்றத்தில் கையளிக்கவேண்டும். சரீரப் பிணைகளில் கைச்சாத்திடும் இருவரும் உறவினர்களாக இருக்கவேண்டும் என்றும் பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.   

சந்தேகநபர், வெளிநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில், தான் விரும்பியே முன்னிலையாகி விசாரணைக்கு ஒத்துழைத்து, வாக்குமூலமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.  

இதேவேளை, சந்தேகநபரின் மடிக்கணினி கடவுச்சொல்லை, விசாரணை அதிகாரியிடம் வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் கட்டளையிட்டது.   

சந்தேகநபரை, நீதிமன்றத்தில் நாளை 12ஆம் திகதி (இன்று) ஆஜர்படுத்துவதாக, அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி, தெரிவித்ததையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவில் அவரை, அன்றையதினம் காலை 9 மணிக்கு ஆஜர்படுத்தி வாக்குமூலம் வழங்குமாறும் உத்தரவிட்டார்.   

சந்தேகநபர், வெளிநாட்டில் தங்கியிருக்கும், தற்காலிக அல்லது நிரந்தரமான விலாசங்களை சத்தியக் கடதாசியின் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

மேற்குறிப்பிட்ட ஆவணங்களை முறையாக ஒப்படைத்து, பிணைக்கான நிபந்தனைகளை முழுமையாக பூர்த்திசெய்ததன் பின்னர், அவருடைய கடவுச்சீட்டை விடுவிக்குமாறும் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X