2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்த சிறுவன்

S.Renuka   / 2025 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

10 வயது சிறுமியை 20 முறை கத்தியால் குத்தி, சிறுவன் ஒருவன் கொலை செய்துள்ளமை தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டி மாவட்டம் முத்தக்யாசாராம் கிராமத்தை சேர்ந்த தம்பதியின் மகள் சஹஸ்ரா. 

10 வயதே ஆன சஹஸ்ரா வீட்டருகே உள்ள பாடசாலையில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் சஹஸ்ரா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  

வேலைக்கு சென்றவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டிற்குள் சஹஸ்ரா இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடல் முழுவதும் கத்திக் குத்து காயங்களுடன் சஹஸ்ரா கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தியும், கொலையாளி குறித்த எந்த தடயமும் கிடைக்கவில்லை. 

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கெமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சஹஸ்ராவின் பாடசாலையில் 10ஆவது படிக்கும் ஒரு மாணவன் வந்து செல்வது பதிவாகி இருந்தது.

அந்த மாணவனை பிடித்து விசாரிக்க, அவர்தான் கொலையாளி என்பது தெரியவந்துள்ளது. சஹஸ்ராவின் வீட்டில் இருந்த கிரிக்கெட் பேட் மற்றும் பணத்தை திருடுவதற்காக அவரை கொலை செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார் அந்த சிறுவன். 

சில நாட்களுக்கு முன்பு சஹஸ்ராவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க, அவரது வீட்டிற்கு சென்றுள்ளார் அந்த மாணவன்.  அப்போது சஹஸ்ராவுக்கு கேக் ஊட்டி விட்ட மாணவன், அவரது வீட்டில் கிரிக்கெட் பேட் மற்றும் பணம் இருப்பதை பார்த்து அதை திருடுவதற்கு திட்டம் போட்டுள்ளார்.

அதன்படி, சம்பவத்தன்று கிரிக்கெட் பேட்டை திருடுவதற்காக அவரது வீட்டிற்கு சென்றபோது, சஹஸ்ரா சத்தம் போட்டதால், அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக மாணவன் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 

சஹஸ்ராவின் உடலில் 20 இடங்களில் கத்திக் குத்து காயம் இருப்பதாக உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாணவனின் வீட்டில் பொலிஸார் சோதனை நடத்தியபோது, கிரிக்கெட் பேட் மற்றும் பணத்தை எப்படி திருட வேண்டும் என்று அவர் கைப்பட எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும்  கைப்பற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .