2024 மே 06, திங்கட்கிழமை

‘சுமந்திரனுக்கு சுதந்திரமில்லையா?’

Nirshan Ramanujam   / 2017 நவம்பர் 09 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா?” எனக் கேள்வியொழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, “எங்களை விட அவருக்குச் சுதந்திரம் இருப்பதாகவே கருதுகிறேன்” என, நேற்று (08) தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழு இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்பு சபையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று (08) இடம்பெற்றது.

இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதிய அரசமைப்பின் ஊடாக நாடு பிளவுபடுவதை நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இது குறித்து மகா சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கின்றார்கள்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அதிகாரத்தைக் கேட்கிறார்கள். நாம் சுமந்திரனை எடுத்துக்கொள்வோம், அவர் கொழும்பில் சுதந்திரமாக வசிக்கவில்லையா? எங்களை விட அவருக்குச் சுதந்திரம் இருப்பதாகவே, நான் கருதுகிறேன். ஆனால், யாழ்ப்பாணத்திலும் அவர் வசிக்க விரும்புகின்றார்.

“இந்த நாட்டில் அனைத்துத் தரப்பினரும் நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கக் கூடிய சூழ்நிலை உருவாக வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மஹிந்த சமரசிங்க, “நாட்டில் மீண்டும் ஓர் இனக்கலவரம் ஏற்படுவதற்கு நாம் இடமளித்துவிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.

மேலும், “1983 ஆம் ஆண்டு, ஜுலைக் கலவரம் ஏற்பட்டபோது, எமது நாட்டுக்குப் பெரும் அவப்பெயர் ஏற்பட்டது. இதனை நாம் மறுத்துவிட முடியாது. அதன்பின்னர், இடம்பெற்ற சம்பவங்களையும் நாம் மறந்துவிட முடியாது. அவை நமக்குப் படிப்பினைகளாக இருக்கின்றன. இங்கே, சம்பந்தன், சுமந்திரன் போன்ற நடுநிலையாகச் சிந்திக்கக் கூடியவர்களும் இருக்கின்றார்கள். அதேவேளை, வடக்கில் இனவாதம் பேசுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறானவர்களுக்குத்தான் இங்கே உரையாற்றுவதற்கும் அனுமதிக்கப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X