Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மரணம் தொடர்பில், பிரதான சாட்சியாளருக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து இரகசியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த அரச சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
தாஜுதீன் பயன்படுத்தியதாக கூறப்படும் அலைபேசியும் மீட்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்த சட்டத்தரணி, அதில் தரவுகள் இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த அலைபேசி தொடர்பிலான சிறப்பு ஆய்வறிக்கையை முன்வைக்குமாறு நீதவான், கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினி பாடசாலையின் முகாமையாளருக்கு கட்டளையிட்டார்.
தற்போதைய சட்டவைத்திய அதிகாரியினால் முன்னெடுக்கப்படுகின்ற ஆய்வறிக்கை தொடர்பில், கொழும்பு நீதிமன்ற முன்னாள் விஷேட சட்டவைத்திய அதிகாரியான ஆனந்த சமரசேகர, ஊடகங்களுக்கு தெரிவித்ததாக கூறப்படும் கருத்தைக் கண்டிப்பதாகவும், அரசாங்கத்தில் முக்கிய பதவியை வகிக்கின்ற அவர், அவ்வாறான கருத்துக்களைக் கூறாமல் இருந்திருக்கலாம் என பாதிக்கப்பட்ட பிரிவு மற்றும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
அவருடைய கருத்து, விசாரணைக்கு இடையூறாக இருக்குமாயின் அது தொடர்பில் இரகசியப் பொலிஸாருக்கு
அறிவிக்குமாறு நீதவான் கட்டளையிட்டார்.
வழக்குப் புத்தகத்தை பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்குமாறு அரச சட்டத்தரணி டிலான் ரத்னாயக்க விடுத்த கோரிக்கையை நிராகரித்த நீதவான், தகவல் அறியும் உரிமை இருப்பதனால் அவ்வாறு கட்டளையிடமுடியாது என்றும் கூறினார்.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் அறிக்கையிடும் போது தொழில் நெறிமுறைகள் படி அறிக்கையிடுமாறும் மன்றிலிருந்த ஊடகவியலாளர்களிடம் நீதவான் கோரிக்கைவிடுத்தார்.
பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் அலைபேசி, நுவரெலியா அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இருந்து கடந்த 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை முருகன் பிளேஸை வசிப்பிடமாக கொண்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், நாரஹேன் பிட்டியவில் உள்ள சாலிகா விளையாட்டு மைதானத்துக்கு அருகில் வைத்து 2012ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி, அவர் பயணம் செய்து கொண்டிருந்த கார், திடீரென தீப்பற்றி எரிந்ததில் அவர் மரணமடைந்துவிட்டதாக அந்த காலத்தில் அறிக்கையிடப்பட்டிருந்தன.
அவருடைய சடலம் மறுநாள் 17ஆம் திகதியன்று காருக்குள்ளிருந்து மீட்கப்பட்டதாகவும் காருக்கருகில் கரித்துண்டுகள் கிடந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் அன்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025