2025 டிசெம்பர் 10, புதன்கிழமை

தொடர் பணியில் முப்படையினரும் அரச நிறுவனங்களும்

S.Renuka   / 2025 டிசெம்பர் 10 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பை மீட்டெடுப்பதற்காக முப்படையினரும் அரச நிறுவனங்களும் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக  இராணுவ மற்றும் விசேட அனர்த்த செயற்பாட்டு மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார். 

இந்த நடவடிக்கைகளுக்காக முப்படைகளைச் சேர்ந்த மொத்தம் 39,000 படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், இலங்கைக்கு உதவி செய்ய வந்த ஐக்கிய அரபு ராச்சியம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவ மற்றும் மீட்பு குழுக்களும், அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு C-150 விமானங்களும் தொடர்ந்து நிவாரண சேவைகளை வழங்கி வருகின்றன. 

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் சுமார் 17,37,330 பேர் தற்போது இடம்பெயர்ந்துள்ளனர். 

தற்போது மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதால், நாடு முழுவதும் நிறுவப்பட்ட பாதுகாப்பு நிலையங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது. ஆரம்பத்தில் 1,529 ஆக இருந்த பாதுகாப்பு நிலையங்கள், தற்போது 630 ஆக குறைவடைந்துள்ளதுடன், 

தற்போது சுமார் 63,628 பேர் அங்கு தங்கியுள்ளனர். நேற்று மாலை 4.00 மணி வரை கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, அனர்த்தம் காரணமாக 638 பேர் இறந்துள்ளதாகவும், சுமார் 197 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பேராதனை பதுளை செங்கலடி வீதி மற்றும் கம்பளை  நாவல்பிட்டி வீதி ஆகியவை மண் சரிவு காரணமாக மூடப்பட்டுள்ளன. அதேவேளை, பரந்தன் முல்லைத்தீவு பாலம் உடைந்துள்ளமையால், மூடப்பட்டுள்ளதுடன், ஏனைய அனைத்து ஏ தர வீதிகளும் போக்குவரத்துக்காக முழுமையாகவோ அல்லது பகுதி அளவாகவோ திறக்கப்பட்டுள்ளன. 

மத்திய மாகாணத்தில் மின்சார விநியோகம் 95 வீதமாக மூடப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டிருந்த 152 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 141 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமை நிலைக்கு  திரும்பியுள்ளன. மேலும், நாடு முழுவதிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,225 கிணறுகள் மற்றும் 90 பாடசாலைகளை முப்படை வீரர்களினால் சுத்தம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X