2024 மே 07, செவ்வாய்க்கிழமை

தட்டுப்பாட்டின் பின்னணியில் ‘மாஃபியா’

Editorial   / 2017 நவம்பர் 08 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்ஷன் இராமானுஜம்

பெற்றோலுக்கான நாளொன்றுக்கான கேள்வி, இரண்டாயிரத்து 200 மெற்றிக் தொன் ஆக அதிகரித்துள்ளதாகவும், தற்போது நாட்டில் உருவாகியுள்ள பெற்றோல் தட்டுப்பாட்டின் பின்னணியில் மாஃபியா குழுவொன்று இயங்குவதாக சந்தேகிப்பதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை, தானே முன்னின்று ஆரம்பிக்கவுள்ளாகவும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர் தி​னேஷ் குணவர்தன, ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, ​அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

“நாட்டில் டீசலுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. பெற்றோலுக்கு மாத்திரமே தட்டுப்பாடு நிலவுகிறது. இதில், குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதிகளும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்றார்.

“உடனடி கேள்வி மனுக்கோரலின் அடிப்படையிலேயே, இந்தியன் ஒயில் கம்பனிக்குப் பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதுவே, தரமற்றதாகக் கூறி ஏற்றுக்கொள்ள மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் எந்தவிதமான உண்மையும் கிடையாது. சாதாரண கேள்வி மனுக் கோரலின் அடிப்படையிலேயே நாம் இறக்குமதி செய்தோம்.

நாளை (இன்று 08) இரவு நாம் இறக்குமதி செய்த பெற்றோலிய கொள்கலன் தாங்கிய கப்பல், இலங்கையை வந்தடையும். அதன் பின்னர் தடையின்றி விநியோகிக்க முடியும்” என்றார்.

“இலங்கையில் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் பெற்றோல் தேவைப்படுகிறது. எனினும், நாம் தொடர்ச்சியாக கடந்த சனிக்கிழமை முதல் விநியோகத்தை மேற்கொண்டு வருகிறோம். சனிக்கிழமை 2 ஆயிரத்து 866 மெற்றிக் தொன், ஞாயிற்றுக்கிழமை 2 ஆயிரத்து 963 மெற்றிக் தொன், திங்கட்கிழமை 2 ஆயிரத்து 623 மெற்றிக் தொன், செவ்வாய்க்கிழமை 3 ஆயிரம் மெற்றிக் தொன் என்ற அடிப்படையில் பெற்றோல் விநியோகித்துள்ளோம்” என்றார்.

“இப்போது பெற்றோலுக்கான கேள்வி நாளொன்றுக்கு 4 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் ஆக அதிகரித்துள்ளது. பெற்றோல் தட்டுப்பாடு ஏற்படப்போவதாக திட்டமிட்ட வகையில் குறுஞ்செய்தி வாயிலாகப் பரப்பப்பட்ட தகவலே, இந்த நிலைக்குக் காரணம். இதனால், பொதுமக்கள் அளவுக்கு அதிகமாக பெற்றோலை பெற்றுக்கொண்டுள்ளனர்” என்றார்.

“இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பெற்றோல், தரமற்றது என நாம் திருப்பி அனுப்பினோம். எனினும், அந்தக் கப்பல் திருகோணமலையில் நங்கூரமிட்டுள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் தரமற்ற அந்தப் பெற்றோலை நாம் பெற்றுக்கொள்ளப் போவதில்லை” என்றார்.

“தற்போது இந்த நிலைமை உருவாகுவதற்கு மாஃபியா குழுவொன்று இயங்குவதாக சந்தேகம் எழுகிறது. தற்போதைய நிலைமை சீரடைந்த பின்னர், இது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என நான் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் கோரியிருக்கிறேன். அந்த விசாரணைகளை நானே முன்னின்று ஆரம்பிக்கவுள்ளேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X