2026 மார்ச் 19, வியாழக்கிழமை

தமிழ் இளைஞர்களுக்கு எதிரானவர் சாணக்கியன்: அந்தனிசில் சாடல்

Editorial   / 2026 மார்ச் 19 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கனகராசா சரவணன்

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டனர். அதேபோன்றதொரு அடக்குமுறைச் சட்டத்தையே, அந்த அரசியல் பின்னணியில் இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று தமிழ் இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி வருகின்றார் என ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் வர்த்தகருமான அந்தனிசில் ராஜ்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில்  புதன்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் ஊடக சுதந்திரத்திற்காகவும் தமிழ்த் தேசியத்திற்காகவும் குரல் கொடுப்பது போலத் தோற்றமளிக்கும் சாணக்கியன், தனக்கு எதிரான உண்மைகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அதே ஊடகங்களை நசுக்க முயற்சிப்பதாக ராஜ்குமார் தெரிவித்தார்.

"நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கு   எதிராக பாராளுமன்றத்தில் பேசிவிட்டு, தற்போது அதே சட்டத்தைப் பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகங்கள் மற்றும் சுமார் 50 இளைஞர்களுக்கு எதிராக அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது ஊடக சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் செயலாகும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 400 மில்லியன் ரூபாய் நிதியில் முறைகேடுகள் நடந்ததாகத் தான் இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவில் முறைப்பாடு செய்ததாலேயே, தன்னை சாணக்கியன் பழிவாங்குவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"களுவாஞ்சிகுடியில் நான் சட்டபூர்வமாக நடத்தி வந்த மீனவர்களுக்கான மண்ணெண்ணெய் எரிபொருள் நிலையத்தை முடக்கச் செய்து, எனது தொழிலைப் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளார். இதனால் அந்தப் பகுதி மீனவர்களும் தற்போது பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். இதற்கு மாவட்ட அரசாங்க அதிபரும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை' என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய அவர், ராஜபக்ஷவின் அரசியல் பாணியிலேயே சாணக்கியன் செயற்படுவதாகக் கூறினார். மேலும், இளைஞர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி அச்சுறுத்தும் இவருக்கு, எதிர்வரும் தேர்தலில் இளைஞர் யுவதிகள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றும், உணர்ச்சிவசப்பட்டு வாக்களிக்காமல் சிந்தித்துச் செயல்படுமாறும் அவர் தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .