2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

தேயிலைத்துறையில் QR புரட்சி

Lenin Raj   / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தேயிலை கைத்தொழிலை புதிய இலக்குகளை நோக்கி நகர்த்தும் நோக்கில், 2030ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாகவும், ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் டொலர்களாகவும் உயர்த்துவதற்கான தேசிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த இலக்கை அடைவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய QR குறியீட்டு (QR Code) முறையிலான உர விநியோகம், கடந்த ஆறு மாதங்களில் (அக்டோபர் 01 முதல் மார்ச் 31 வரை) அபரிமிதமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

முன்னர் நடைமுறையில் இருந்த முறையில், தேயிலை பயிரிடப்பட்ட நிலத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டே உர அளவு தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், உரக் கூட்டுத்தாபனம் ஊடாக மாத்திரமே உரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற தடைகளும் இருந்தன.

இதற்குத் தீர்வாக, பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சினால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, கடந்த மூன்று மாதங்களில் பெறப்பட்ட சராசரி கொழுந்து விளைச்சலின் அடிப்படையில் உர மானியம் வழங்கப்படுகிறது.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் உரத்தைப் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், சிறு மற்றும் நடுத்தர தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உரத்தை விரைவாகப் பெற்றுக்கொள்ள முடிகிறது.

மார்ச் 31ஆம் திகதி வரையிலான தரவுகளின்படி பதிவு செய்யப்பட்ட விவசாயிகள்: 226,511 பேர் QR குறியீட்டைப் பெற்றுள்ளனர்.

இதில் 187,759 சிறு மற்றும் நடுத்தர தேயிலை விவசாயிகள் மானிய விலையில் உரத்தைப் பெற்றுள்ளனர்.

 21,117.7 மெட்ரிக் தொன் உரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் 50 கிலோகிராம் உர மூடைக்கு 4,000 ரூபாயும், 25 கிலோகிராம் உர மூடைக்கு 2,000 ரூபாயும் மானியமாக வழங்குகிறது. இதன் மூலம் 334,256 (50கிலோ) மூடைகளும், 176,199 (25கிலோ) மூடைகளும் விவசாயிகளின் கைகளுக்குச் சென்றுள்ளன.

2024/2025 முழு ஆண்டிலும் 84,472 விவசாயிகள் மாத்திரமே உர மானியம் பெற்றிருந்த நிலையில், புதிய QR முறையில் வெறும் 6 மாதங்களில் 187,759 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 122.3% வளர்ச்சியாகும். அதேபோல் உர விநியோகத்தின் அளவு 62.2% அதிகரித்துள்ளது.

தற்போது நிலவும் மத்திய கிழக்கு போர்ச் சூழலைக் கருத்திற்கொண்டு, சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு விசேட மானியம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, தற்போது நடைமுறையிலுள்ள மானியத்திற்கு மேலதிகமாக, இந்த ஆண்டில் ஒருமுறை மாத்திரம் 50 கிலோகிராம் உர மூடை ஒன்றுக்கு 5,000 ரூபாய் மேலதிக மானியம் வழங்க திரறைசேரி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த புதிய 5,000 ரூபாய் மானியமும் QR முறையினாலேயே வருட இறுதிக்குள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .