2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

“தொற்றுநோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்”

Janu   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால்  நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 50 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க  தெரிவித்தார்.

தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க, திங்கட்கிழமை (01) முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகைகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவசரகால அனர்த்த சூழ்நிலையில் கொள்வனவு நடவடிக்கைகளை தடையின்றி மேற்கொள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளருக்கும் 50 மில்லியன் ரூபா வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.

மேலும், உலர் உணவுக்காக இதுவரை பணத்தை வங்கியில் வைப்பிலிடும் முறைக்கு மேலதிகமாக தேவைக்கேற்ப உலர் உணவுப் பொருட்களை பொதியாக வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உதவிச் செயலாளர், பிரதேச செயலாளர்கள் தமது பகுதிகளில் நிலவும் விசேட நிலைமைகளின் அடிப்படையில் பொருத்தமான குழுவொன்றின் மூலம் முடிவுகளை எடுக்கத் தேவையான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறிப்பாக உலர் உணவுப் பொருட்களுக்கு  வழங்கப்படும் பணம்  07 நாட்களுக்காக ஒரு குடும்பத்திற்கு  வழங்கப்படும் என்றும், அதனை தேவைக்கேற்ப அதிகரிக்கலாம் என்றும், தனி நபருக்கு 2100 ரூபா, இரண்டு உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 4200 ரூபா மற்றும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 6300 ரூபா, நான்கு உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு 8400 ரூபா மற்றும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு 10,500 ரூபா என்றவகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்று நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளால்  நோய்கள் பரவுவதற்கான அதிக ஆபத்து குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொண்ட உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க, இது தொடர்பாக சுகாதாரத் துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

வெள்ளம் காரணமாக வீடுகளை சேறு, மண் மற்றும் குப்பைகளிலிருந்து சுத்தம் செய்ய வேண்டியிருப்பதால், இதற்காக சுற்றறிக்கை 1(2025) இன் பிரிவு 5(2) திருத்தப்பட்டுள்ளது என்றும், அதன்படி, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்ட ஒவ்வொரு வீட்டிற்கும் அதன் சுகாதார நிலைமைகளை சீர்செய்யவும் அதை வசிக்கக் கூடிய வீடாக மாற்றவும் 10,000 ரூபா முன்பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

அதன்படி, வீட்டின் உரிமையாளரைப் பொருட்படுத்தாமல், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் உரிய முன்பணத்தை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுற்றறிக்கையை பாதுகாப்பு செயலாளர் சம்பத் துய்யகொந்தா நேற்று வெளியிட்டதாகவும் ஜயதிஸ்ஸ முனசிங்க தெரிவித்தார்.

அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்பாடல் நடவடிக்கைகளை சீர்செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த நேரத்தில் நிவாரணப் பணியாளர்கள் மிகவும் கடினமாக உழைத்து வருவதால், பொதுமக்கள் தமது முழுமையான ஆதரவை அவர்களுக்கு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X