2024 மே 03, வெள்ளிக்கிழமை

திடீரென உண்ணாவிரதத்தில் குதித்த முருகன், ராபர்ட் பயஸ்

Freelancer   / 2024 பெப்ரவரி 01 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருச்சி சிறப்பு  முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ராபர்ட் பயஸ் ஆகியோர்   உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இந்த கடிதத்தில் இருவரும் தெரிவித்துள்ளதாவது

"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில்இ ஏறக்குறைய ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டோம்.

சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் இன்னும் சிறை கொட்டடியில் இருந்து விடுவிக்கப்படவில்லை. சிறப்பு முகாம் எனப்படும் மற்றொரு சிறையில் அடைத்தார்கள். திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகனும் அடைத்து வைக்கப்பட்டுள்ளோம். 

சிறப்பு முகாம் எனப்படுவது சிறையை விட கொடுமையானதாக இருக்கிறது. இங்கு நடைபயிற்சி செய்வதற்கோ நண்பர்களை பார்ப்பதற்கோ முடியவில்லை.

சிறைவாசிகளோடு பழகுவதற்கு கூட எந்தவித அனுமதியும் வழங்கப்படுவதில்லை. சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட நாளில் இருந்து பல மாதங்கள் ஆரம்பத்தில் அறையிலேயே தங்க வைக்கப்பட்டதால் பல நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். 

எங்களது உடல் நலத்தை சரி செய்ய நடைபயிற்சி செய்ய அனுமதி கேட்டும் இதுவரை எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை. இதனால் நோய்வாய்ப்பட்டுள்ளோம்.

கடந்த மாதம் திருச்சி அரசு மருத்துவமனை சென்று ஆய்வு செய்த போது ரத்த அழுத்தம், கொழுப்பு, சிறுநீரகக் கல், மூட்டு வலி இருப்பதாக மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். அதனால் கடந்த 22.1.2024 ஆம் தேதி அன்று மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு நடைப்பயிற்சி செய்யவும் விளையாடவும் அனுமதி கேட்டு கடிதம் எழுதியும் இதுவரை எந்தவித பதிலும் இல்லை.

இந்த முகாமில் எங்களது உரிமைகளுக்கோ உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லை. இதனால் தான் சாந்தன் உடல்நலக் குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

அதே நிலை தொடர்ந்தால் நாங்கள் இங்கேயே இறப்பது உறுதி. எங்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து நேரிட்டால் அதற்கு இங்குள்ள அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்.

அகதிகள் நேரடியாக பிற நாடு செல்வதற்கு இலங்கை அரசு பாஸ்போர்ட் வழங்கிட அனுமதி வழங்கி வருகிறது. அதற்கு இலங்கை தூதரகம் அழைத்து போய் கடவுச்சீட்டு பெறவும் அனுமதி கேட்டுள்ளோம். இதுவரை எந்த பதிலும் கிடைக்காததால் வேறு வழியின்றி இன்று முதல் கால வரையற்ற உண்ணா மறுப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .