2024 மே 07, செவ்வாய்க்கிழமை

‘தீர்வை நோக்கி நகர வேண்டும்’

Editorial   / 2017 நவம்பர் 01 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நிர்ஷன் இராமானுஜம்

“நிலையான அபிவிருத்தியுடன், அனைவருக்கும் சமமான ஜனநாயக உரிமைகளை வழங்குவதே அரசமைப்பின் நோக்கமாக இருக்க வேண்டும். அரசமைப்பின் ஊடாக அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை நோக்கி நாம் நகர வேண்டும்” என, நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நேற்று (31) தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான, அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழுவால் நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை தொடர்பான இரண்டாம் நாள் விவாதம், நேற்று (31) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “அதிகாரப் பகிர்வு குறித்து ஒன்றிணைந்த எதிரணியினர், பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். எனினும், 1995ஆம் ஆண்டு, வெள்ளைத் தாமரை இயக்கத்தில் என்னோடு இணைந்திருந்து, இன்று ஒன்றிணைந்த எதிரணியில் இருக்கும் சிலரோடு, அன்று நாம் கலந்துரையாடியிருந்தோம்.

“இப்போது எதிர்ப்புத் தெரிவிக்கும் மஹிந்த ராஜபக்ஷ, தான்தான் நாட்டின் ஐந்தாவது ஜனாதிபதி என பல்வேறு இடங்களில் இன்று கூறிக்கொண்டிருக்கிறார். இங்கே, அரசமைப்பின் இடைக்கால அறிக்கையில் என்ன இருக்கிறது என அறிந்துகொள்ளாத சிலரே, அது குறித்துத் தவறான கருத்துகளைப் பரப்புகிறார்கள்.

“அரசமைப்பு வழிநடத்தும் குழுவிலிருந்து விமல் வீரவன்ச விலகிச் சென்றார். ஆனால் அரசமைப்புச் சபை நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், இங்கே மதிய உணவை அருந்திக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

“அன்று மெதமுலனவில் கோப்பைகளைக் கழுவியவர்களும், இவர்களோடு இணைந்திருக்கிறார்கள். இந்த உயர்ந்த சபைக்கு ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும் ஒவ்வொரு பிரிவு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒவ்வொரு கலாசாரத்தைப் பின்பற்றும், வெவ்வேறு சிந்தனையுடையவர்கள் இருக்கிறார்கள்.

“எனவே, நாம் அனைவருடனும் கலந்தாலோசித்து, நாடு, நாட்டுமக்களின் நலன் கருதி, முன்னோக்கிச் செல்ல வேண்டிய காலம் இப்போது கனிந்துள்ளது” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X