2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘தேசிய அரசாங்கத்தை அசைக்க முடியாது

Niroshini   / 2018 பெப்ரவரி 20 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“கடந்த மூன்று தேர்தல்களிலும் மூன்று கட்சிகளுக்கும் ஆதரவு கிடைத்துள்ளன. இதை வைத்துக்கொண்டு, இந்தத் தேசிய அரசாங்கத்தை அசைக்க முடியாது என தெரிவித்துள்ள  இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன, இன்று நாட்டில் ஓர் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. அவை குறித்தும் விவாதிக்க வேண்டிய தேவைகள் உள்ளன” என்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (19) நடைபெற்ற நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்கக்கோவை மீதான விவாதத்தின்போது கலந்துகொண்ட உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“எமது அரசாங்கம், குறுகிய காலத்தில் பொதுமக்களின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. எமது ஆட்சிக் காலத்தில் தான் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அதேபோல் இந்த ஆட்சியில் மிகவும் குறைந்த மட்ட குறைகள் மற்றும் தவறுகளுடன் ஒரு தேர்தல் இடம்பெற்று முடிந்துள்ளது.

“இந்நிலையில், இன்று நாட்டில் ஓர் அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது. அவை குறித்து நாம் விவாதிக்க வேண்டிய தேவைகள் உள்ளன. இந்த நாடாளுமன்றத்தில் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. எனினும், நாம் புதிய நாடாளுமன்றக் கலாசாரம் ஒன்றை  உருவாக்கியுள்ளோம்.

“நிலையியற் கட்டளைகளை, முதல் முறையாக  பரிசீலனை செய்து பார்க்க முடிந்துள்ளது. கடந்த இரண்டு தசாப்த காலத்தில் எந்தக் கட்சி இந்த விடயத்தில் அதிக பொறுப்பை ஏற்றுகொள்ள போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

“மேலும், இப்போதுள்ள அரசியலை நிலைமைகளைப் பார்க்கையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்களின் பூரண ஆணை ஜனாதிபதிக்குக் கிடைத்தது. அதேயாண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிக ஆதரவு கிடைத்தது. தனி அரசாங்கம் ஒன்று அமைக்கக் கூடிய ஆணை கிடைக்காத போதிலும் பெரும்பான்மை ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்தது. அதேபோல் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வெவ்வேறு கட்சிகளை ஆதரித்தனர். ஆகவே, கடந்த மூன்று தேர்தல்களில் மூன்று கட்சிகளுக்கு ஆதரவு கிடைத்துள்ளன. ஆனால், இதனை கொண்டு அரசாங்கத்தை அசைக்க முடியாது.

“இன்று ஏற்பட்டுள்ள குழப்பங்கள் எந்தவொரு கட்சியினதும் பிரச்சினை அல்ல. இது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு  ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல். இவ்வாறு குழப்பும் நடவடிக்கைகளைச் சிலர் முன்னெடுக்கையில் நிறைவேற்று அதிகாரத்தை விடவும் நாடாளுமன்றத்துக்கே அதிக பாதிப்பு ஏற்படும். 

“நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவருக்கும்  பொறுப்பு உள்ளது. மூன்று தேர்தலில் மூன்று தரப்பை மக்கள் ஆதரித்துள்ளனர். ஆனால், சகலரும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும். அரசாங்கத்தைக் குழப்பக் கூடாது. எவ்வாறிருப்பினும், தேசிய அரசாங்கம் அதன்  கால எல்லை வரையில் முன்னெடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .