Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Nirshan Ramanujam / 2017 நவம்பர் 23 , மு.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
“உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பிற்போடப்படுகின்றமையானது ஒரு தரப்பினரின் திட்டமிட்ட செயற்பாடு” என ஜே.வி.பியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சுமத்தினார்.
“அதற்குத் துணைபோகும் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்ளும் அமைச்சர் பைசர் முஸ்தபா பதவி விலக வேண்டும். அதேவேளை, தேர்தலைத் துரிதப்படுத்த இயலுமான அனைத்துவகைப் பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர். வீதியில் இறங்கி, மக்கள் போராட்டத்தின் ஊடாகத்தான் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமெனில் அதற்குத் தயார்” என்றும் தெரிவித்தார்.
2018ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் கமத்தொழில், மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அபிவிருத்தி, நீர்ப்பாசன நீர்வள முகாமைத்துவம், ஆரம்பக் கைத்தொழில் ஆகிய அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,
“உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லைகள் மற்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானித்து வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானிக்கு, டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தலை நடத்த வேண்டுமென அனைத்துத் தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள இந்நிலையில், தேர்தலுக்கு எதிராக யார் வழக்குத் தொடுத்தார்கள் என்பதை, இந்த நாட்டு மக்கள் அறிவார்கள்.
“அமைச்சர்களான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, தயாசிறி ஜயசேகர, டிலான் பெரேரா ஆகியோருக்கு மிக நெருக்கமானவர்களே தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கின்றார்கள். ஆகையால், இங்கே சூத்திரதாரிகள் யார் என்பது வெளிச்சமாகின்றது.
“பொதுவான அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டதாக இருந்தாலும் இது மிக நேர்த்தியாகத் திட்டமிட்ட அடிப்படையிலேயே, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தரப்பினரின் திட்டமிட்ட செயற்பாடாகும்.
“கடந்த ஆட்சிக்காலத்தில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருந்தது. அந்த அச்சுறுத்தலில் இருந்து மீள்வதற்காகத்தான் மக்கள் மாற்று ஆட்சியை விரும்பி வாக்களித்தார்கள். ஆனால், இன்று என்ன நடக்கிறது? ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்தவிடாமல் பிற்போடுகின்றமையானது எந்தளவுக்கு நியாயமானது?
“நாம் அரசியல் தெரியாத சிறு குழந்தைகள் அல்லர். இங்கே என்ன நடக்கிறது என்பதை நாம் நன்றாக அறிந்துவைத்திருக்கின்றோம். இதுவரை காலமும் நாம் நியாயமாகவும் நேர்மையாகவும் அரசியல் செய்து வந்திருக்கின்றோம் என்ற நம்பிக்கை காரணமாகவே இந்த விடயத்தில் எம்மால் பகிரங்கமாகப் பேச முடிகிறது.
“தேர்தல் பிற்போடப்படுகின்றமை திட்டமிட்ட செயல் என ஏன் சொல்கின்றோம்? இன்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த நீதிமன்ற வழக்கில் பிரதிவாதியாக இருப்பவர் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆவார். அவர் இன்று எங்கே இருக்கின்றார்? அவர், நாட்டில் இல்லை. தனக்கு எதிராக நீதிமன்ற வழக்கு இருக்கும்போது, அது விசாரணைக்கு எடுக்கப்படுகிறது என அறிந்தும் அவர் ஏன் வெளிநாட்டுக்குச் சென்றார்? பொறுப்புடைய அமைச்சரின் செயற்பாடா இது?
“தேர்தல் தொடர்பான வர்த்தமானியை வெளியிடுவதில் அவர் வேண்டுமொன்றே காலதாமதத்தை மேற்கொண்டார். அதற்காக ஒவ்வொரு காரணத்தை முன்வைத்துக்கொண்டிருந்தார். நியாயமாக இருந்தால், நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நாம் அது தொடர்பில் இந்த உயர்சபையில் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவரைக் காணவில்லை. இவ்வாறு பொறுப்பற்ற வகையில் செயற்படும் அமைச்சர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால் பதவி விலக்குவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டி வரும்.
“தேர்தலைத் துரிதமாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் வரை தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு கட்சி என்ற வகையில் எங்களால் இயன்ற நடவடிக்கைகளை நாம் எடுக்கவுள்ளோம். இல்லாவிட்டால் வீதியில் இறங்கித்தான் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றால், நாம் அதற்கும் தயாராக இருக்கின்றோம். எமது ஜனநாயகப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு, ஒன்றிணைந்த எதிரணி உள்ளிட்ட அனைவருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
36 minute ago
42 minute ago
51 minute ago