இலங்கையின் இறையாண்மை எந்த வகையான வெளிப்புற அழுத்தத்தாலும் சமரசம் செய்யப்பட மாட்டாது என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்,
கச்சதீவுக்கு இன்று மாலை விஜயம் செய்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் - மயிலிட்டியில் உரையைாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை ஜனாதிபதி உறுதியாக மீண்டும் வலியுறுத்தியதுடன், நாட்டின் கடற்றொழில் சமூகங்களுக்கு கச்சத்தீவின் மூலோபாய மற்றும் உணர்வுபூர்வமான முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
"கச்சத்தீவு நமது மீன்பிடி சமூகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. தீவு தொடர்பில் பெரிய பொது விவாதம் எழுந்துள்ளது, இன்று அங்கு கடற்றொழிலாளர்களை சந்திக்க விரும்புகிறேன்.
இலங்கையின் பொறுப்பு அதன் நிலப்பரப்பைத் தாண்டி கடல் எல்லைகள் மற்றும் வான்வெளியை உள்ளடக்கியது.
நமது தீவுகள், நமது கடல் நமது வானம் அல்லது நமது நிலம், அவை நமது மக்களுக்குச் சொந்தமானவை. எதிர்கால சந்ததியினருக்காக அவற்றைப் பாதுகாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்
எனவே, எந்த வகையான வெளிப்புற அழுத்தத்துக்கு நாங்கள் அடிப்பணியமாட்டோம்" என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் யுத்தமொன்று ஏற்படுவதற்கான சூழல் தற்போது இல்லை, எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
”முன்னைய காலங்களில் கொழும்பில் ஒரு அரசாங்கம் உள்ளது, தமக்கு வேறொரு அரசாங்கம் வேண்டும் என வடக்கில் உள்ளவர்கள் கோரியிருந்தனர்.
தற்போது அனைவருக்குமான அரசாங்கமொன்று அமைய பெற்றுள்ளதால் அவ்வாறான கோரிக்கைகளுக்கு இனி இடமில்லை.
கடந்த காலங்களில் இருந்த இனவாதத்தை மையப்படுத்திய அரசியல் முறைமையை இந்த அரசாங்கம் இல்லாமல் செய்துள்ளது” எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தவெக இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு விஷயங்களைப் பேசிய தவெக தலைவர் விஜய், “தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக, கச்சத்தீவை மட்டும் மீட்டுக்கொடுங்கள்” என பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.