2025 செப்டெம்பர் 03, புதன்கிழமை

“நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம்”

Editorial   / 2025 செப்டெம்பர் 03 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

  “கடல்சார் மரபுரிமையென்பது தொடர்புகள் பற்றிய ஒரு கதையாகும். அமெரிக்காவிற்கும் இலங்கைக்குமிடையில் காணப்படும் இன்றைய பங்காண்மையானது அந்த மரபினைத் தொடர்கிறது. துறைமுகங்கள் முதல் மக்கள் வரை, பாதுகாப்பினைப் பேணுவதற்காகவும், திறந்த வர்த்தகத்தை உறுதிப்படுத்துவதற்காகவும், எமது நாடுகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைந்து பணியாற்றும் நாம் இந்தோ-பசிபிக் பங்காளர்களாவோம்  என்று தெரிவித்துள்ள அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங். பல நூற்றாண்டுகளாக பாதுகாப்பான கடற் பாதைகள் செழிப்பின் உந்துசக்தியாக இருந்துள்ளன என்பதையும், அவை அமெரிக்காவினதும் இலங்கையினதும் நலன்களுக்கு இன்றியமையாதவையாக விளங்குகின்றன என்பதையும் கொடவாய கப்பற் சிதைவு நினைவூட்டுகிறது” என குறிப்பிட்டு இச்செயற்திட்டத்தின் முக்கியத்துவத்தினை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மத்திய கலாச்சார நிதியத்தின் கடல்சார் தொல்பொருள் பிரிவுடன் இணைந்து (MAU), அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆகியோர் கொடவாய கப்பற் சிதைவு தொடர்பான ஒரு கண்காட்சியினை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் புதன்கிழமை (03) அன்று ஆரம்பித்து  வைத்தனர். 

கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியத்தினூடாக (AFCP) நிதியுதவியளிக்கப்படும், 2,100 ஆண்டுகளுக்கும் அதிக பழமையான, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அறியப்பட்ட மிகப் பழமையான மரத்தினாலான கப்பற் சிதைவினைப் பாதுகாப்பதற்கான, ஒரு அமெரிக்க-இலங்கை பங்காண்மையான, பலவருட காலங்களாக செயற்படும் கொடவாய கப்பற் சிதைவினைப் பாதுகாத்தல் தொடர்பான செயற்திட்டத்தின் உச்ச நிலையினை இந்நிகழ்வு குறிக்கிறது.

 இப்புராதன வர்த்தகக் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட தொல்பொருட்களை ஆவணப்படுத்திப் பாதுகாப்பதன் மூலம், மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இந்தோ-பசிபிக் உறவுகளை பலப்படுத்துவதற்கும், பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்திற்கான ஒரு அடித்தளத்தை கட்டியெழுப்புவதற்கும் இரு நாடுகளும் எவ்வாறு இணைந்து பணியாற்றுகின்றன என்பதை இம்முன்முயற்சி நிரூபிக்கிறது.

இக்கண்காட்சியானது செப்டம்பர் மாதம் 3ஆம் திகதி காலை 11.00 மணி முதல் பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து செப்டம்பர் மாதம் 4 மற்றும் 5ஆம் திகதிகளில் தினமும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அது பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும். 

இக்கப்பற் சிதைவிலிருந்து மீட்கப்பட்ட மட்பாண்டங்கள், அரைக்கும் கற்கள், கண்ணாடி மற்றும் உலோகத்தினாலான பாளங்கள் மற்றும் கார்னிலியன் மணிகள் உள்ளிட்ட தொல்பொருட்களை பார்வையாளர்கள் பார்வையிடலாம். ஒரு வர்த்தகக் கப்பலாக இந்தக் கப்பலின் பங்கை வெளிப்படுத்துவது மட்டுமன்றி, இந்து சமுத்திரத்தினூடாக இடம்பெற்ற வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தின் ஒரு மையமாக வரலாற்றில் இலங்கை கொண்டிருந்த நிலையினையும் - பிராந்திய செழிப்பில் கடல்சார் பாதுகாப்பு கொண்டுள்ள தொடர்ச்சியான முக்கியத்துவத்தையும் இக்கண்டுபிடிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

“கொடவாயவில் மட்டுமன்றி, நாடு முழுவதும் எமது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காண்மை மிக முக்கியமானதாகும். எதிர்கால சந்ததியினருக்காக வரலாற்றைப் பாதுகாப்பதில் சர்வதேச ஒத்துழைப்பின் வலிமையை இச்செயற்திட்டம் எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கத் தூதரகமும், கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியமும் வழங்கிய உறுதியான ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கை வரலாற்றின் இந்தப் பொக்கிஷமானது, எமது மக்களுக்கும் உலக மக்களுக்கும் அணுகக்கூடிய ஒன்றாக இருப்பதை நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்துள்ளோம்” என புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.

“இக்கண்காட்சியும் ஆய்வரங்கும் கடந்த காலம் தொடர்பான வெறும் கொண்டாட்டங்கள் மட்டுமல்ல, அவை எதிர்காலத்தை ஊக்குவிக்கும் வாய்ப்புகளுமாகும். இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்கள் எல்லைகள் மற்றும் காலங்களைக் கடந்த தொடர்பு, வர்த்தகம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் தொடர்பான ஒரு கதையைச் சொல்கின்றன. இக்கண்காட்சியைப் பார்வையிட்டு, எம்மை ஒன்றிணைக்கும் ஆழமான வரலாற்றைக் கண்டறிய வருமாறு அனைத்து இலங்கையர்களையும் பார்வையாளர்களையும் நான் அழைக்கிறேன்.” என மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் குரே கூறினார்.

2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட, கொடவாய கப்பற் சிதைவினைப் பாதுகாப்பதற்கான இச்செயற்திட்டம், கடல்சார் தொல்பொருளியல் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை எட்டியுள்ளது. AFCP நிதியுதவியுடன், விபத்துக்குள்ளாகி சிதைவடைந்த கப்பலிலிருந்து எடுக்கப்பட்ட கிட்டத்தட்ட 200 தொல்பொருட்களை MAU பாதுகாத்துள்ளது, கப்பல் மூழ்கிய இடத்தினை ஆய்வு செய்வதற்காக மேம்பட்ட 3D மாதிரியாக்க (மொடலிங்) நுட்பங்களைப் பயன்படுத்தி விபத்துக்குள்ளாகிய கப்பல் சிதைவு காணப்படும் இடத்தின் விரிவான 3D மாதிரியை உருவாக்கியுள்ளது. இம்முயற்சிகள் இலங்கையில் கடல்சார் தொல்பொருளியல் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் நீருக்கடியில் கலாச்சார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு உலகளாவிய தராதரத்தையும் நிறுவியுள்ளன. இந்த தொல்பொருட்கள் காலியிலுள்ள கடல்சார் தொல்பொருள் நூதனசாலையில் நிரந்தரமாக வைக்கப்படுவதுடன், இக்கப்பற் சிதைவு தொடர்பான கதையை உள்ளூர் பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்லும் AFCPஇன் உதவியுடன் கூடிய ஒரு கல்வி நிகழ்ச்சித் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும்.

கலாச்சாரப் பாதுகாப்பிற்கான அமெரிக்கத் தூதுவர்கள் நிதியம் (AFCP) பற்றி: 2001ஆம் ஆண்டு முதல், தொல்பொருள் தலங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள், நூதனசாலைகளுக்கான சேகரிப்புகள் மற்றும் கலாசார மரபுகள் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட 17 செயற்திட்டங்களுக்கு வழங்கப்பட்ட 1.3 மில்லியன் டொலர்களுக்குமதிகமான பெறுமதியான உதவிகள்  உட்பட, AFCP ஆனது உலகளாவிய ரீதியில் 1,300 இற்கும் மேற்பட்ட செயற்திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது.

கடல்சார் தொல்பொருள் பிரிவு (MAU) பற்றி: மத்திய கலாச்சார நிதியத்தின் கீழ் 2001ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட கடல்சார் தொல்பொருள் பிரிவானது, ஆராய்ச்சி, பாதுகாப்பு மற்றும் பயிற்சி ஆகியவற்றினூடாக நீருக்கடியில் காணப்படும் இலங்கையின் கலாச்சார மரபுரிமையினைப் பாதுகாக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .