Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜூன் 12 , பி.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனவாதிகள் உள்ளனர்
நாட்டின் கடன் சுமை அதிகமாகும்
பொருளாதாரச் சுமைகள் வரவிருந்தன
ஆதரவை நான் எதிர்பார்க்கவே இல்லை
பௌத்தர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்
ஓரங்கட்டப்பட்ட நாட்டையே நான் பொறுப்பேற்றேன
'இலங்கைப் படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை. அவர்களின் ஒத்துழைப்பின்றி, எம்மால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். தேவையேற்படின் மாத்திரம், சர்வதேச நாடுகளின் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்வோம்' என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'நல்லிணக்கம் தோற்றால் அது எமக்கு தோல்வியாகும்' என்றும் தெரிவித்துள்ளார்.
'நல்லிணக்கம் என்பது, சீமெந்து, கல், மணலினால் உருவாக்கக்கூடியது அல்ல. போர் வெற்றியுடனேயே, போருக்கு வித்திட்ட காரணிகள் தொடர்பிலும் கண்டறியப்பட்டிருக்க வேண்டும். மீண்டுமொரு முறை, அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தீர்வு காணப்படல் வேண்டும். அதன் மூலம், நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும். தெற்கிலுள்ள பௌத்தர்களை, இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த நாடு, எம் அனைவருக்கும் சொந்தமானது. நல்லிணக்கம் தோல்வியுற்றால், நாமும் தோல்வியுற்றவர்களாகி விடுவோம்' என்றும் அவர் கூறினார்.
தமிழ்மிரரின் சகோதரப் பத்திரிகையான சண்டே டைம்ஸுக்கு
வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அந்த நேர்காணலின் சுருக்கம் பின்வருமாறு,
நீங்கள் ஜனாதிபதியாக பதவியேற்று ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. இக்காலப்பகுதியில் நடந்தேறிய சம்பவங்கள், உங்களை திருப்திபடுத்துகின்றனவா ?
சந்தோஷப்படக்கூடிய பல விடயங்கள் உள்ளன. ஜனநாயகம் ஒழிக்கப்பட்டு, மனித உரிமைகள் உட்பட அடிப்படை உரிமைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, நீதிமன்றம் முடக்கப்பட்டு கடன் சுமையில் இந்நாடு சிக்கியிருந்தது. பல சவால்களை இந்நாடு எதிர்கொண்டிருந்தது. பாதுகாப்புப் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பயந்திருந்த காலம் அது. யுத்தக்குற்றச்சாட்டுகள் அவர்களை அச்சம்கொள்ள வைத்திருந்தன. எமது நாட்டுக்கு எதிராக, பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படவிருந்தன. நாம் ஆட்சியைக் கைப்பற்றும் முன்னரே, அவ்வாறான இரு தடைகள் விதிக்கப்பட்டுவிட்டன. ஜீ.எஸ்.பி ப்ளஸ் மற்றும் மீன் ஏற்றுமதித் தடைகளே அவை. நாட்டுக்குள்ளும் பல உள்ளகப் பிரச்சினைகள் வலுப்பெற்றிருந்தன.
நாட்டின் இயற்கைச் சொத்துக்களை, அரசியல்வாதிகள் சூறையாடியிருந்தனர். காடுகள் அழிக்கப்பட்டிருந்தன. மணல், கல், இல்மனைட் போன்ற கனிய வளங்கள் சூறையாடப்பட்டன. உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியல்வாதிகளின் தேவைக்கமையவே இடம்பெற்றன. பெண்களுக்கு எதிரான வன்புணர்வுகள், கொலைகள், அதிகாரத் துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு முடிவில்லாமல் இருந்தது. சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள், அச்சத்துடனும் சந்தேகத்துடனுமே வாழ்ந்தனர். புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச அளவில் அவர்களது வலையமைப்பு இயங்கிக்கொண்டிருந்தமையால், மீண்டும் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தலைதூக்கும் என்ற அச்சமும் நாட்டில் நிலைகொண்டிருந்தது.
இவ்வாறான காரணங்களால், சர்வதேச நாடுகள் அனைத்தும் எம்மைவிட்டு விலகத் தொடங்கின. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றன, எமக்கு நிதியுதவி வழங்க மறுத்தன. எமது நாட்டின் அபிவிருத்திக்குத் தொடர்ந்து பங்களிப்பு நல்கிவந்த ஜப்பான் முகவரகம் மற்றும் ஜெய்கா நிறுவனம் என்பனவும் எம்மைவிட்டு விலகின. அயலவர்கள் எம்மை ஓரங்கட்டத் தொடங்கினர். சொல்வதற்கு இன்னும் பல விடயங்கள் உள்ளன. சுருக்கமாகச் சொல்வதானால், ஏனைய நாடுகளால் ஓரங்கட்டப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட நாடொன்றையே நான் பொறுப்பேற்றேன் என்று கூறலாம்.
மேற்படி நிலைமைகளை மாற்றவே, நான் உள்ளிட்ட எமது அரசாங்கம், கடந்து காலங்களில் முயற்சித்து வந்தது. தற்போதைய நிலைமையில், நாடொன்றை தனியாக முன்னேற்ற முடியாது. தொழில்நுட்ப ரீதியிலேயே நாம் இன்று முன்னோக்கிச் செல்லவேண்டி ஏற்பட்டுள்ளது. அதன் பயன்களை, எமது நாட்டுக்கும் எமது இளைஞர் சமுதாயத்துக்கும் நாம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அடுத்த விடயம் என்னவென்றால், நாம் சுமந்துகொண்டிருக்கும் 9,000 பில்லியன் ரூபாய்க்கும் அதிகக் கடனைச் செலுத்த வேண்டுமாயின், அதற்கு பலம்வாய்ந்த நாடுகளின் உதவி அத்தியாவசியம்.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற சாதகமான விடயம் தான், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம். அதுவரை காலமும், ஜனாதிபதிக்கு மாத்திரமே உரித்தாகியிருந்த அதிகாரங்கள், இன்று நாடாளுமன்றத்துக்கு உரித்தாகியுள்ளன. இந்நடவடிக்கைகள், உயர்நீதிமன்றத்தின் அர்ப்பணிப்புடனேயே இடம்பெற்றன. இப்போது, அரசியலமைப்புப் பேரவையொன்றை உருவாக்கியுள்ளோம். அதன் கீழ், 9 சுயாதீன ஆணைக்குழுக்கள் செயற்படுகின்றன. பொலிஸ், மனித உரிமைகள், ஊமல் மற்றும் மோசடி என்பன அவற்றில் சிலவாகும்.
ஏனைய நாடுகள், மீண்டும் எம்மோடு கைகோர்க்கத் தொடங்கியுள்ளன. போர்க் குற்றச்சாட்டுக்கள் என்று நீட்டப்பட்ட விரல்கள் தற்போது மடக்கப்பட்டுள்ளன. எம்மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள், தற்போது இல்லை. நீதிமன்றம், தற்போது வலுவாக இயங்குகின்றது. எமது அந்நிய செலாவணி, படிப்படியாக முன்னேறி வருகின்றது. சுற்றுச்சூழல் அழிவுகள், தற்போது குறைவடைந்து வருகின்றன. வருடத்துக்கு 5 ஆயிரம் சிறுநீரக நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு வந்தனர். விவசாயத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த இரசாயனப் பொருட்களே அதற்கு வழிவகுத்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஊட்டச்சத்து பற்றாக்குறையால் 20 சதவீதமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்நிலைமையைப் போக்க, நாம் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். சுங்கத்தின் உதவியுடன், போதைப்பொருளை ஒழிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இரசாயனப் பசளையின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, சேதனப் பசளையின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாம் கண்ட வெற்றியின் சிறிதளவையே இங்கு நான் கூறினேன். எவ்வாறாயினும், கடந்து சென்ற ஒன்றரை ஆண்டுக் காலப்பகுதி தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ஊழல் பேர்வழிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக, தேர்தல் காலங்களில் தொடர்ந்து உறுதியளித்து வந்தீர்கள். ஆனால், அந்த உறுதிமொழிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லையே ?
வாழைக்குலையை வெட்டிக்கொண்டு ஓடிய திருடனைப் பிடிப்பது போன்ற விடயமல்ல இது. இந்த ஊழல் மோசடிகளில் அரசியலிலும் வர்த்தகத்திலும் அதிகாரம் படைத்தவர்களே சிக்குண்டுள்ளனர். தங்களுடைய அறிவு மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தியே, அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். அதனால், ஓரிரு மாதங்களில், இவ்வாறான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்திவிட முடியாது. சில நாடுகளில், இவ்வாறானவர்களைக் கண்டுபிடித்துவிட 9 அல்லது பத்து வருடங்கள் ஆகியுள்ளன.
காட்டுச் சட்டத்தை அமுல்படுத்தவேண்டிய தேவை எமக்கில்லை. மனித உரிமைகளையும் சட்டத்தையும் மீறும் வகையில் நாம் செயற்பட மாட்டோம். சில விசாரணைகள், இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. கடுமையான மோசடிகள் தொடர்பில் விசாரிப்பதற்கு, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகள், எமக்கு உதவி வருகின்றன. இவ்விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழு, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட நிறுவனங்களை மேலும் பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளேன்.
போர்க்குற்ற விசாரணைக்கு சர்வதேச நீதிபதிகளை இணைத்துக் கொள்ளப்போவதில்லை என்று நீங்கள் கூறியுள்ளீர்கள். இது அரசாங்கத்தின் தீர்மானமா ?
ஆம், இந்த விடயத்தில் எங்களுக்கு, சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்பதை தெளிவாகத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் ஒத்துழைப்பின்றி, எம்மால் எமது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். தேவையேற்படின் மாத்திரம், சர்வதேச நாடுகளின் தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்வோம். இருப்பினும், அவ்வாறான உதவியொன்றைப் பெற்றுத்தானாக வேண்டுமென்று கட்டாயமில்லை. அது தொடர்பில் எமக்கு எவ்வித அழுத்தங்களும் இல்லை. அதற்காக, நாம் எவருடனும் உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளவும் இல்லை.
நீங்கள் தலைமைத்துவம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில், உங்களது எதிராளியான மஹிந்த ராஜபக்ஷவுக்கு
ஆதரவளிப்பவர்களும் இருக்கின்றனர். அக்கட்சியின் நிலைப்பாடு எவ்வகையானது ?
கட்சியின் தலைமைத்துவத்தை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. இரு கட்சிகளும் இணைந்தே ஆட்சியமைப்பதென்று, கொள்கைப் பிரகடணத்தில் இருந்தது. அது தான், அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தைச் செயற்படுத்தவும் காரணமாகியது. கட்சியின் தலைமைத்துவம் எனக்கு கிட்டிய போதிலும், பல உறுப்பினர்களின் ஒத்துழைப்பு, எனக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும், காலியில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தின் போது தான், என்னை ஏற்றுக்கொண்ட நிறையப்பேர் உள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டேன். இரு தேர்தல்களில் நாம் தோற்றுப்போயுள்ளோம். இனிவரும் காலங்களில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாத வகையில், கட்சியை மறுசீரமைக்க வெண்டும்.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், தேர்தலில் தோல்வியுற்றவர்களை சு.க தேசியப் பட்டியலுக்குள் உள்வாங்கியதாக உங்கள் மீது குற்றச்சாட்டுள்ளது. நாட்டை விட, கட்சியின் நிலைப்பாடு தான் உங்களுக்கு முக்கியமா ?
அவர்கள் தோல்வியுற்றமைக்கு காரணம், எனக்கு எதிரானவர்களின் நடவடிக்கைகளே ஆகும். மக்கள் அவர்களைப் புறக்கணிக்கவில்லை. தோல்வியடையச் செய்யவில்லை. கடந்த தேர்தல்களின் போது, விருப்பு வாக்குகளில் முன்னிலையில் இருந்தவர்களே அவர்கள். நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல, நீண்டகால அரசியல் அனுபவமிக்கவர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வேண்டும். அதனாலேயே, அவர்களை நான் தேசியப் பட்டியலினூக
நாடாளுமன்றத்துக்குள் கொண்டுவந்தேன்.
கூட்டு எதிரணியின் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்? 2001 - 2004 காலத்திலிருந்து மூன்று வருடங்களில் உடைந்துபோன கூட்டணி அரசாங்கத்துக்கும் நல்லாட்சி அரசாங்கத்துக்கும் இடையில் வேறுபாடு உள்ளதா ?
60 வருடங்களின் பின்னர், நாட்டின் இரு பிரதான கட்சிகள் கூட்டிணைந்துள்ளன. இதுவொரு புதிய விடயம். இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று வேறுபடுவதால், ஒன்றாக வேலை செய்வது கடினமான இருக்கலாம். ஆனால், அதில் நாம் வெற்றி கண்டுள்ளோம். இந்த அரசாங்கம் வலுவானதல்ல என்று சிலர் கூறுகின்றனர். அவர்களின் கூற்றை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
நாம், ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு உரிய இடத்தை வழங்கியுள்ளோம். நீதிமன்றத்தை பலமாக்கியுள்ளோம். நல்லிணக்கச் செயற்பாட்டை பலமாக்கியுள்ளோம். போருக்குப் பிந்திய காலங்களில் முன்னெடுத்திருக்க வேண்டிய நடவடிக்கைகளை, நாம் முன்னெடுத்துள்ளோம். நல்லிணக்கம் என்பது, சீமெந்து, கல், மணலினால் உருவாக்கக்கூடியது அல்ல. போர் வெற்றியுடனேயே, போருக்கு வித்திட்ட காரணிகள் தொடர்பில் கண்டறியப்பட்டிருக்க வேண்டும்.
மீண்டுமொரு முறை, அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வடக்கிலுள்ள இளைஞர்கள், மீண்டும் தங்கள் கரங்களில் ஆயுதங்களை ஏந்தினால், நாடு என்ற வகையில், அது நாம் கண்ட தோல்வியாகும். அதனால், அவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் தீர்வு காணப்படல் வேண்டும். அதன் மூலம், நல்லிணக்கம் ஏற்படுத்தப்படல் வேண்டும். தெற்கிலுள்ள பௌத்தர்களை, இது தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும். இந்த நாடு, எம் அனைவருக்கும் சொந்தமானது.
நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் நபர்கள், சக்திகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட எதிர்ப்பார்க்கிறீர்களா ?
இவ்வாறானவர்களை இனத்துரோகிகள் அல்லது இனவாதிகள் என்றே நான் அறிமுகப்படுத்துவேன். வடக்கைப் போன்று, தெற்கிலும் இவ்வாறானவர்கள் இருக்கின்றனர். நாட்டுக்கு வெளியேயும் இவ்வாறானவர்கள் இருக்கின்றனர். அவர்கள் எங்களுக்கு தொந்தரவுகளை ஏற்படுத்தினால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கப்போவதில்லை.
மேற்கத்திய நாடுகளுடன் நீங்கள் தொடர்புகளைப் பேணி வருகின்றீர்கள்.
ஆனால் சீனா ?
சீனாவுடன் எமக்கு நல்லுறவு உண்டு. சீனாவுக்கான விஜயமொன்றுக்கு, மற்றுமொரு அழைப்பு எனக்கு கிடைத்துள்ளது. கடந்த மாதத்தில், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியை, அவரது அழைப்பின் பேரில் சந்தித்தேன். இவர்கள் அனைவருடனும் எமக்கு நல்ல தொடர்பு உண்டு. சமச்சீரான வெளியுறவுக் கொள்கையொன்றைக் கடைபிடிப்பதால் தான், இன்று நாம் வெற்றிகண்டுள்ளோம்.
அதிகரிக்கப்படும் வாழ்க்கைச் செலவு காரணமாக, மக்கள் உங்கள் மீது குற்றஞ்சுமத்தி வருகின்றனர். உங்கள் கருத்து ?
உண்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பாரிய கடன் சுமை காரணமாகவே, அரசாங்கத்தினால் இவ்வாறானதொரு முடிவை எடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு மிக விரைவில், இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று நான் நம்புகின்றேன். அது சம்பந்தமாக, பல்வேறு யோசனைகளை முன்வைக்கவுள்ளேன்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துக்கூற முடியுமா ?
பிரச்சினைகள் உள்ளன என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.இது தொடர்பில் புதிய திட்டங்கள் உள்ளனவா ?
ஆம். பொருளாதாரத்தை பலப்படுத்தவும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கவும், யோசனைத் திட்டமொன்றைத் தயாரித்துள்ளேன். அவற்றை நான் தற்போது மேலதிகமாக ஆராய்ந்து வருகின்றேன்.
அர்ஜுன மகேந்திரனை, மீண்டும் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பது தொடர்பில், அரசாங்கத்துக்கும் கூட்டு எதிரணிக்கும் இடையில் முரண்பாடு நிலவுகிறது. அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன ?
(சிறு புன்முறுவலுடன்) அது தொடர்பில் தீர்மானிப்பதற்கு, இன்னும் நாட்கள் உள்ளன.
கேள்விகள் முடிந்தன. தனது ஆசனத்திலிருந்து எழுந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 'அரசாங்கமொன்றின் முடிவுகளை அறிந்துகொள்ள, ஒன்றரை வருடங்கள் போதாது. செய்வதற்கு பல வேலைகள் உள்ளன. அதற்கு, காலம் அத்தியாவசியமானது. அனைத்துவித சவால்களையும் எதிர்கொண்டு, இந்த நாட்டை உயரத்துக்கு கொண்டுசெல்வோம். ஆனால் அதற்கு, அனைவரதும் ஒத்துழைப்பு எனக்குத் தேவை' என்று கூறி முடித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .