Nirshan Ramanujam / 2017 நவம்பர் 16 , மு.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
“நலன்புரி சேவைகளுக்கான எந்த நிதியும் 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் குறைக்கப்படவில்லை. கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்பயிற்சிக் கல்விக்கென 325 பில்லியன் ரூபாய் இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது” என, நிதி இராஜாங்க அமைச்சர் ஏரான் விக்கிரமரட்ன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (15) நடைபெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“நாம் போட்டி மிக்க உலகொன்றிலேயே வாழ்கின்றோம். ஏற்றுமதிகள் மூலம்தான் நாம் மக்களுக்கான வருமானங்களை ஈட்டுகின்றோம். எவ்வாறிருப்பினும், நலன்புரி சேவைகளுக்கான எந்த நிதியையும் நாம் குறைக்கவில்லை. குறைந்தளவிலான வருமானம் ஈட்டுவோருக்குப் பாதுகாப்பு வலையொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்றார்..
“அத்துடன், சமூக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இந்த வரவு-செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக நலன்புரி சேவைகளுக்காக 183 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 129 பில்லியன் ரூபாய், தேசிய வரவு-செலவுத்திட்ட திணைக்களத்தின் ஊடாகச் செயற்படுத்தப்படுகின்றது. இதில் 44 பில்லியன் ரூபாய் சமுர்த்தி நிவாரணத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
“எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சமுர்த்திக்கான நிதி ஒதுக்கீடு இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தகுதியற்றவர்களுக்கு சமுர்த்தி உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும், சமுர்த்தி பயனாளிகளின் பட்டியல் தற்போது தகுந்த ரீதியில் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“உர மானியம், சிறு தேசியலை மற்றும் இறப்பர் உற்பத்தி போன்றவற்றுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கல்விக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், முதியோர், ஊனமுற்றோர், சிறுநீரக நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார்கள் போன்றோருக்கும் இந்த வரவு-செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தப் பட்டியல் நீண்டு செல்கின்றது.
“அந்த வகையிலேயே, 13 வருட பாடசாலை கல்வியைக் கட்டாயமாக்கும் திட்டத்தை நோக்கி நாம் பயணிக்கிறோம். அதேபோல், பல்கலைக்கழகக் கல்வி மற்றும் தொழில் கல்வியையும் சர்வதேச தரத்துக்கு உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்கிடையே, நாம் உயர்கல்வியை தனியார் மயப்படுத்த முயற்சிப்பதாக சைட்டம் சர்ச்சையைப் பயன்படுத்தி பிரசாரம் செய்யப் பார்க்கின்றனர். ஆனால், அது முற்றிலும் பொய்யான பிரசாரமொன்றாகும். அரச பல்கலைக்கழங்களில் நாம் புதிய பீடங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.
2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்பயிற்சி கல்விக்கென 325 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைக்கென 200 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5-19 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்குக் காப்புறுதித் திட்டமொன்று, கடந்த வரவு-செலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அது இம்முறை வரவு-செலவுத்திட்டத்தில் செயற்படுத்தப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், அரச மற்றும் தனியார் என, எந்த வைத்தியசாலைக்குச் சென்றாலும் உள்வாங்கப்படும் வகையிலேயே, இந்தக் காப்புறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேநேரம், 2018ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் ஊடாக இந்தக் காப்புறுதித் திட்டத்தைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்' என்று கூறினார்.
11 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
43 minute ago
54 minute ago
1 hours ago