Freelancer / 2025 டிசெம்பர் 20 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக முன்வைக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டினால், 2026 ஏப்ரல் அளவில் நாடு மீண்டும் பொருளாதார ரீதியான திவால்நிலைக்கு வழிவகுக்கும் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, 05 ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஆவணத்தை இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். ஆனால் மிகக் குறுகிய காலத்தில், மீண்டும் 500 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்பட்டுள்ள பேரழிவிலிருந்து இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும், நமது பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இதுபோன்ற குறைநிரப்பு பிரேரணை அவசியம் என்பதை இந்த பாராளுமன்றத்தில் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும்
இந்த 500 பில்லியன் காரணமாக ஏப்ரல் மாதத்திற்குள் பொருளாதாரம் சரிந்துவிடும் என்று ஒரு கருத்தாடல் நடக்கின்றது.
இவ்வளவு பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணையை முன்வைப்பதன் மூலம் பொருளாதாரம் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் என்ற சிலரின் கூற்றுகள் குறித்து நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நாங்கள் நிதி ஒழுக்கத்துடனும், குறிக்கோளுடனும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட அரசாங்கம். 2025 ஆம் ஆண்டை எடுத்துக்கொண்டால், இந்த ஆண்டு பொருளாதாரத் துறையில் பல முக்கியமான சாதனைகளை நாம் அடைந்துள்ளோம். உங்களுக்குத் தெரியும், நீண்ட காலமாக, திறைசேரிக் கணக்கு வங்கி மேலதிகப் பற்றுடனே இருந்தது. சில நேரங்களில் இந்த வங்கி மேலதிகப் பற்றுகளுக்கு 33%, 36% வட்டி செலுத்தப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், வங்கி மேலதிகப் பற்று180 பில்லியனாக இருந்தது. 2019 இல், அது 274 பில்லியனாக இருந்தது. 2020 இல், இது 575 பில்லியனாகவும், 2021 இல், அது 821 பில்லியனாகவும் இருந்தது. அதாவது அரசாங்கத்தின் வங்கிக் கணக்கில் 821 பில்லியன் மேலதிகப் பற்று இருந்தது. ஆனால் 2025 நவம்பர் மாதத்திற்குள், நமது அரசாங்கத்தின் திறைசேரிக் கணக்கின் நேர்மறை மதிப்பு 1202 பில்லியனாக இருந்த்து. இது கடந்த காலங்களுடன்
ஒப்பிடும்போது 02 டிரில்லியன் அதிகமாகும். இது நமது நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒரு புள்ளியாகும்.
அத்தகைய நிதி கையிருப்பு இல்லாமல், இன்று இந்த 500 பில்லியனை ஒதுக்க முடியாது. எனவே, இந்த 500 பில்லியனை நிறைவு செய்ய வேறு பல உத்திகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இரண்டாவதாக, நமது வருமானத்தை எடுத்துக் கொண்டால், 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் மிக உயர்ந்த அரச வருமானமாக 15.9% 2025 ஆம் ஆண்டில் ஈட்டியுள்ளது. மூன்றாவதாக, 1977 ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்த வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறையாக 4.5 வரவு செலவுத்திட்ட பற்றாக்குறையை நாம் பதிவு செய்துள்ளோம். மேலும், வரவுசெலவுத்திட்ட இலக்குகளைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு இந்த நாட்டின் வரலாற்றில் வருமான இலக்குகளை மீறிய ஆண்டாக உள்ளது என்பதை நாம் அறிவோம்.
இந்த ஆண்டு, நாங்கள் 4960 பில்லியன்களை எதிர்பார்த்தோம், 2025 டிசம்பர் 15, க்குள், நாங்கள் 5125 பில்லியன்களை வருமானமாக ஈட்டியுள்ளோம். கடன் எல்லை அதிகரிக்காமல் வைத்திருக்கவும்
முடிந்தது. 2026 வரவுசெலவுத்திட்டத்தை நாங்கள் முன்வைத்தபோது, 3800 பில்லியன் கடன் எல்லையை எதிர்பார்க்கிறோம் என்று கூறினோம், ஆனால் வரவுசெலவுத்திட்டம் மூலம் மேலும் 60 பில்லியன்களைக் குறைத்து 3740 பில்லியன் கடன் எல்லையை பேணுகிறோம்.
எங்கள் கடன் எல்லை அதிகரிக்காமல் இந்த மேலதிக 500 பில்லியனை நாங்கள் பயன்படுத்துகிறோம். அது மிகவும் முக்கியமானது. எனவே, நீண்ட காலத்திற்குப் பிறகு, வரவுசெலவுத்திட்டத்தில் எதிர்பார்க்கப்படும் கடன் எல்லைகளுக்குள் இருக்க முடிந்துள்ளது.
மேலும், 1950 இற்குப் பின்னர், எங்கள் முதன்மைக் கணக்கில் 06 முறை மட்டுமே மேலதிகம் ஏற்பட்டுள்ளது. 74 ஆண்டுகளில், முதன்மைக் கணக்கில் 06 முறை மேலதிகம் ஏற்பட்டுள்ளது, மேலும் அந்த 06 முறையும் 1% க்கும் குறைவாகவே உள்ளன. ஆனால் வரலாற்றில் முதல்முறையாக, இந்த ஆண்டு எங்கள் முதன்மைக் கணக்கு மேலதிக 3.8% ஆக பதிவாகியுள்ளது.
இலங்கையின் வரலாற்றில் வெளிநாட்டில் இருந்து மிக அதிகமான பணம் அனுப்புதல் இந்த ஆண்டு பெறப்படுகிறது. சுற்றுலா வருமானம் 2018 ஆம் ஆண்டில் சுமார் 3.8 பில்லியனாக இருந்தது. அதை விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். எமது பொருட்கள்
மற்றும் சேவை ஏற்றுமதிகளிலிருந்து கிட்டத்தட்ட 18 பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கிறோம். இந்த தரவுகளிலிருந்து, மிகவும் வலுவான நிதி முகாமைத்துவம் மற்றும் இலக்கு சார்ந்த பணிகளின் விளைவாக இந்த வெற்றியை நாங்கள் அடைந்துள்ளோம்.
ஆனால் பெரிய அதிர்ச்சிகளைத் தாங்கும் பொருளாதாரம் நம்மிடம் இருக்கவில்லை. ஒரு சிறிய அல்லது தவறான முடிவு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளாதாரமே நம்மிடம் இருந்தது. எனவே, கடந்த 14-15 மாதங்களாக, நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்து, எந்தத் தவறும் செய்யாமல் மிக நுட்பமான அம்சங்களைக் கூட ஆய்வு செய்து, பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மைக்குக் கொண்டு வந்துள்ளோம். யாரும் அதை மறுக்க முடியாது, ஆனால் அவ்வாறான பொருளாதார ஸ்திரத்தன்மையில்தான் நாம் இந்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோம். நாம் இவ்வளவு பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான நிலையில் இல்லாவிட்டால், இதை எதிர்கொள்ள முடியாது. இப்போது நாம் அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மைதான் இதை எதிர்கொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் நமக்கு அளித்துள்ளது என்றார். (a)

9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025