2025 ஜூலை 07, திங்கட்கிழமை

நிலையியற் கட்டளைகளைப் பின்பற்றினால் புதிய பிரதமரை நியமிக்க ஜனாதிபதி தயார்?

Editorial   / 2018 நவம்பர் 26 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிலையியற் கட்டளைகளை, நாடாளுமன்றம் பின்பற்றினால், புதியதொரு பிரத​மரை நியமிப்பதற்கு, தான் தயாராக உள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு ஒரு மாதம் நிறைவடையவுள்ள நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக நியமித்ததற்குப் பின்னர், தமிழ்மிரர் பத்திரிகையின் சகோதர பத்திரிகையான சண்டே டைம்ஸுக்கு வழங்கியுள்ள செவ்விலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில், மஹிந்த ராஜபக்‌ஷ, பெரும்பான்மையை நிரூபித்தால், எந்தவொரு தடையும் இன்றி, அவரால் தொடர்ந்து அரசாங்கத்தைக் கொண்டுநடத்த முடியுமென்றும் ஆனால், அவருக்கு பெரும்பான்மை இல்லை என்று நிரூபனமானால், அவருடைய முடிவை அவர் எடுத்துக்கொள்வார் என்று தான் நம்புவதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவை, மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு, எந்​தவொரு வாய்ப்பும் இல்லை என்றும் தான், கொள்கைகளுடனேயே தீர்மானங்களை மேற்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ராஜபக்‌ஷவும் அவருடைய கூட்டணிக் குழுத் தலைவர்களும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்திருந்தனர். நாடாளுமன்றத்தில் இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்காமல், ஒரு மாதகாலமாக செயற்பட்டுவரும் அரசாங்கத்தின் எதிர்காலம் குறித்து ஆராயும் முகமாகவே, இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு, நாடாளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளைக் பின்பற்றுமாறு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த பின்னர், கட்சித் தலைவர்கள் தொடர்ந்து தங்களது பொறுப்புகளுக்கேற்ப கடமையாற்ற முடியும் என்று, ஜனாதிபதி கூறியுள்ளார்.

மேலும் நாடாளுமன்றத்திலுள்ள 225 பேரில், யாருக்கு பெரும்பான்மை உள்ளதோ, அவரே பிரதமராகச் செயற்பட முடியுமென்றும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .