2026 மே 09, சனிக்கிழமை

’நெருக்கடி தொகையாக ரூ. 25 ஆயிரம் வழங்குக’

Editorial   / 2020 டிசெம்பர் 08 , மு.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலால் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்ளக்கூடிய நாடாக இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன. நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'உலகில் பெரும்பாலான நாடுகள், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. கொரோனா முதல் அலைக்கு முகம்கொடுத்தபோது இலங்கை நல்லதொரு நிலைமையிலேயே இருந்தது' என்றார்.

முதல் அலையின் போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில், மிக மோசமாக செயற்பாடும் நாடுகளின் வரிசையில் 15 ஆவது இடத்தில் இலங்கை இருந்தது எனத் தெரிவித்த அவர், தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை பாரதூரமாக எதிர்கொண்டுள்ள நாடாக இலங்கை மாறியுள்ளது என அமெரிக்காவின் தொற்றுநோய் தடுப்பு தொடர்பான தரப்படுத்தல் நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது என்றார்.

அந்த தரப்படுத்தலில், நான்கு கட்டங்களாக அவதான நிலைமை பிரிக்கப்பட்டுள்ளது எனவும், அவற்றில் மிகக் பாரதூரமான நிலைமையில் உள்ள நாடுகள் வரிசையில் இலங்கையும் இணைந்துள்ளதால் வெளிநாட்டு சுற்றுலாப் பிரயாணிகள் இலங்கைக்கு செல்வதை தவிர்த்துகொள்ள வேண்டுமென அந்த அமைப்பு அறிவித்துள்ளது என்றார்.

இவ்வாறிருக்க முழு நாடும் கொரோனா வைரஸ் பரவக்கூடிய இடமாக மாறியுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் கூறியுள்ளார் என தெரிவித்த அவர், இவ்வாறான நிலையிலும் அரசாங்கம் மக்களுக்கு எந்தவொரு சலுகையையும் வழங்காமல் உள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.

இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் நூற்றுக் கணக்கில் விமானங்களை, வெளிநாடுகளுக்கு அனுப்பி தமது நாட்டு பிரஜைகளை அழைத்து வருகின்ற போது இலங்கை வெறுமனே 15 விமானங்களை மாத்திரமே அனுப்பிக்கொண்டிருப்பது கவலைக்கிடமானது எனத் தெரிவித்த அவர், 5 ஆயிரம் ரூபாயை மட்டுமே வழங்கிவிட்டு சமாளித்துவிட அரசாங்கம் முயற்சிக்கிறது என்றார்.

இவ்வாறிருக்க அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு துணைபோகின்ற வகையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும், உலகின் வேறு எந்தவொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனக் கூறி வருவதாக தெரிவித்த அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கோரிக்கையின்படி ஒரு குடும்பத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க வேண்டியது அவசியம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .