2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை இல்லை

Kogilavani   / 2016 மே 23 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், மூடப்பட்டிருந்த அனைத்துப் பாடசாலைகளும், இன்று (23) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

இதேவேளை, வெள்ளப்பெருக்குக்கு இலக்கான பரீட்சைச் சான்றிதழ்களை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, பரீட்சைகள் ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தங்களுடைய பிரதேசங்களைச் சேர்ந்த கிராம அலுவலர்களினூடாக, பரீட்சை சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியும் என்றும் கிராம அலுவலர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களூடாக உரிய சான்றிதழ்களை, உரியவர்களின் கைகளிலேயே ஒப்படைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதற்கான திட்டமொன்றை பரீட்சைகள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை, சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 40 பாடசாலைகளைக் காலவரையறையின்றி மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்த மக்கள், மேற்படி பாடசாலைகள் மற்றும் விஹாரைகளிலேயே தங்கியுள்ளதால், இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 32 பாடசாலைகள், தற்காலிக முகாம்களாக இயங்கி வருகின்றன. அத்துடன், மேலும் 19 பாடசாலைகள், மண்சரிவு அபாயப் பிரதேசங்களில் அமைந்துள்ளன என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து, பாடசாலைகளில் தங்கியுள்ள மக்கள், மீண்டும் தங்களது வீடுகளுக்குச் செல்லும் வரையில், இப்பாடசாலைகளை மூட வேண்டி ஏற்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர்,  மேலும் கூறினார்.

இதேவேளை, வெள்ளப்பெருக்குக்கு இலக்காகியுள்ள மற்றும் அனர்த்தத்துக்கு இலக்காகித் தங்கியுள்ள கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவெல பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகள் மாத்திரம், இன்றும் நாளையும் மூடப்பட்டிருக்கும் என மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய அறிவித்துள்ளார்.

மேலும், வெள்ளம் காரணமாக அழிவடைந்த பாடசாலை மாணவர்களின் குறிப்புப் புத்தகங்களுக்குப் பதிலாக, பிரதியெடுக்கப்பட்ட குறிப்பேடுகளை வழங்குவதற்கு, கொழும்பு பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கல்வி அமைச்சில் உருவாக்கப்பட்டுள்ள பேரழிவு நிவாரண விசேட நடவடிக்கைப் பிரவினூடாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகியுள்ள மாணவர்கள், க.பொ.த உயர்தரப் பிரிவில் பயன்படுத்திய குறிப்புப் புத்தகங்களிலிருந்தே மேற்படி பிரதிகள் எடுக்கப்பட்டு, குறிப்பேடுகள் தயாரிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .