Princiya Dixci / 2017 ஏப்ரல் 18 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.திருஞானம்
இந்து சமயப் பாடக் கலைத்திட்டத்தில் காணப்படுகின்ற அல்லது சுட்டிக்காட்டப்படுகின்ற விடயங்களை ஆராய்ந்து, அவற்றை மாணவர்கள் விரும்பிக் கற்கும் விதத்தில் மாற்றங்களைச் செய்வதற்கக, இந்து சமயப் பாட நிபுணத்துவக்குழு ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
இக்குழுவில், கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம்¸ பரிட்சைத் திணைக்கள பாட விடயங்களுக்கு பொறுப்பான மேலதிகாரிகள், பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறைசார் நிபுணர்கள், மாகாண உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் இந்து சமய பாட ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் உள்வாங்கப்படவுள்ளனர்.
இது தொடர்பான கலந்துரையாடல், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தலைமையில், கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, கல்வி அமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தின் ஒருங்கிணைப்பாளர் லெனின் மதிவாணன்¸ தேசிய கல்வி நிறுவகத்தின் இந்து சமய பாடத்துக்குப் பொறுப்பான விரிவுரையாளர் பொன் ஜெயரூபன்¸ பேராசிரியர்களான சி.பத்மநாதன்¸ ஏ.என்.கிருஸ்ணவேனி, டொக்டர் க.இரகுவரன் உட்பட ஒய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இத்போது கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர்,
“இந்து சமயப் பாடத்திட்டத்தில், தரம் ஒன்று முதல் தரம் 11 வரை பாடத்திட்டத்தில், மாணவர்களின் தகுதிக்கு அப்பாற்பட்ட பல விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக, நிபுணத்துவம் பெற்ற பலர், எனது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளனர். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில், டக்ளஸ் தேவானந்தாவும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
“இதற்கான ஒரு முறையான ஏற்பாட்டை மேற்கொள்ளும் வகையில், பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. இக்கலந்துரையாடல்களில் பல்வேறு கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றன.
“இந்து சமயப் பாடத்திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளினால், இந்து சமயத்தைக் கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
“இந்நிலைமை தொடருமானால், மாணவர்கள் எதிர்காலத்தில் இந்து சமயம் தொடர்பான கற்கைக்கு முக்கியத்துவம் வழங்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த பாடத்திட்டம் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டுவிடும். அதற்கு இடமளிக்க முடியாது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .