2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

ப்ளக், சொக்கட் தொடர்பில் புதிய நியமம் அமுல்

George   / 2016 செப்டெம்பர் 13 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

இலங்கை மக்களின் பாதுகாப்பான மின்சார பாவனைக்கும் மின்சாரத்தினால் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்பு, சொத்து  இழப்பு என்பவற்றை கட்டுபடுத்தும் நோக்கில் புதிய வகை குதை மற்றும் செறுகி என்பவற்றை பயன்படுத்த எடுக்கப்பட்டுள்ள தேசிய நியம அமுலாக்கம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்றைய தினம் விடுக்கப்பட்டது.

13 அம்பியர் குதை மற்றும் செறுகி அதாவது சதுர முனை என்று பொதுவாக கூறப்படுகின்ற 'ஜீ' வகை குதை மற்றும் செறுகி என்பன இலங்கையின் தேசிய நியமமாக  அரசாங்கம் நியமித்துள்ளது.

நாட்டில் பொதுவாக பயன்பாட்டில் உள்ள சுவர் குதைகளில் செறுகியொன்றை செலுத்த முடியாதபோது  அதற்கு மாற்றீடாக சந்தையில் உள்ள பல வகையான குதைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அதிகளவானவை தரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற  குதைகளாக காணப்படுகின்றன.

இதன் காரணமாக மின் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகின்றன. 2013ஆம் ஆண்டில் மின்சார விபத்துகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆகவும் 2014ஆம் ஆண்டு 73 ஆகவும் 2015ஆம் ஆண்டு 95 ஆகவும் காணப்படுகின்றது.

இந்நிலையில், இதனை தவிர்த்துக் கொள்வதற்காக உலகில் பல நாடுகளில் உள்ள ஒரே வகையான நியம முறையை இலங்கையிலும் பயன்படுத்த தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் அமைச்சர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த சட்டமூலத்துக்கு கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இந்நிலையில், இந்த புதிய நடைமுறைக்கு கொண்டு வர இரண்டு வருடங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16ஆம் திகதிக்கு பின்னர் புதிய நியம அலகுடைய குதைகளை தவிர ஏனைய குதைகள் விற்பனை செய்வது தடைசெய்யப்படும். எனினும் இறக்குமதி மற்றும் உற்பத்தி செய்வது 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 16ஆம் திகதி முதல் தடைசெய்யப்படும்.

அத்துடன் புதிதாக இறக்குமதி செய்யப்படும் சகல மின்சாதனப் பொருட்களும் புதிய நியமத்தின் அடிப்படையில் சதுர முனை செருகி கொண்டதாகவே இறக்குமதி செய்யப்படும்.

தற்போது இறக்குமதி செய்யப்பட்டு சந்தையில் உள்ள ஏனைய குதைகள்; மற்றும் செருகிகளை 2 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யலாம் என்றும் அதன் பாவனைக்காலம் முடியும்வரை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைக்கு அமைவாக வீடுகள், அலுவலகங்களில் உடனடியாக மின்சுற்றை புதுப்பிக்க வேண்டியதில்லை. தற்போது உள்ள அவற்றின் பாவனைக்காலம் அல்லது உத்தரவாத காலம் முடியும் வரை பயன்படுத்தமுடியும்.
எனினும், இனி புதிதாக மின்சுற்றை செய்துகொள்பவர்கள் புதிய நியமத்தின் அடிப்படையை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அத்துடன், குதைகள் சேதமடைந்து புதிதாக குதைகளை பொறுத்துவோர் 13 அம்பியர் கொண்ட குதைகளை பொறுத்துமாறு அறிவுறுத்தப்படுகின்றதுடன் உரிய தகைமையுடைய மின்னியலாரைக் கொண்டு பரிசோதித்துக் கொள்வதும் பாதுகாப்பானதாக அமையும் என அந்த ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும் நாடு முழுதும் இந்த புதிய நியமத்தின் அடிப்படையிலான குதை மற்றும் செறுகிகளின் பயன்பாடு 2038 ஆம் ஆண்டு பூரணமாகும்  என தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X