Janu / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 06:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் வியாழக்கிழமை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தனர்.
இதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், அண்மைக்கால பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் குழுவினர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றது. குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாட்டின் பொருளாதாரம் முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் அதிக தாங்கும் திறன் கொண்ட பொருளாதாரமாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் எதிர்வரும் காலங்களில் செயற்படும் முறைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
இந்த வெளிப்புற சவால்களுக்கு மத்தியிலும், அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சியைப் பேணிக்கொண்டு, இந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றன.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்பாட்டுத் தலைவர் Evan Papageorgiou உட்பட அதன் பிரதிநிதிகளான Martha Woldemichael, Enrique Flores Curiel, Dinar Prihardini, Ursula Wiriadinata, Ozlem Aydin, Yorbol Yakhshilikov, Klakow Akepanidtaworn மற்றும் மானவி அபேவிக்ரம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளர் எஸ். ஜெகஜீவன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
31 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
38 minute ago
45 minute ago
1 hours ago