2026 மார்ச் 11, புதன்கிழமை

பொருளாதார ஸ்திரத்தன்மை பாதுகாப்பு : ஜனாதிபதி அலுவலகத்தில் முக்கிய பேச்சு

Janu   / 2026 மார்ச் 11 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை  பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கு இணங்க நிறுவப்பட்டுள்ள பொருளாதாரக் கண்காணிப்புக் குழு, செவ்வாய்க்கிழமை (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சரும், தொழில் அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தலைமையிலான இந்தக் குழுவில், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) ரசல் அபொன்சு செயலாளராகவும் அழைப்பாளராகவும் செயற்படுகிறார்.

மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க, திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களான ஹான்ஸ் விஜயசூரிய மற்றும் துமிந்த ஹுலங்கமுவ, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே.ஏ.எஸ்.டி.எஸ். ராஜகருணா, லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க, வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஹனீப் யூசுப், இலங்கை தேயிலை சபையின் தலைவர் ஆர்.கே. ஒபேசேகர, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) உள்ளிட்டோர் இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயற்படுகின்றனர்.

தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால், இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய மோசமான பாதிப்புகள், சந்தையை ஸ்திரப்படுத்துதல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

ஒரு சிறிய திறந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாடு என்ற ரீதியில், வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம், அந்த வலய நாடுகளுடனான வர்த்தகத் தொடர்புகள் மற்றும் முதலீடுகள் போன்றவற்றிலேயே நாட்டின் எரிபொருள் இறக்குமதி உள்ளிட்ட விடயங்கள் தங்கியுள்ளன. எனவே, வெளிப்புற பொருளாதார அதிர்வுகளிலிருந்து இலங்கையைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அவற்றை தொடர்ச்சியாகக் கண்காணித்து மேற்கொள்ள வேண்டிய கொள்கை ரீதியான தீர்மானங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .