2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பல பகுதிகள் கடலில் மூழ்குமா?: பரபரப்பு தகவல்

R.Tharaniya   / 2025 ஜூலை 31 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பருவநிலை மாற்றம் காரணமாக கடல்மட்டம் உயர்வதால் 2040-ம் ஆண்டுக்குள் மும்பை 10 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலத்தை இழந்து மூழ்கும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வு அறிக்கைகள் எச்சரித்து உள்ளன. 

தெற்கு மும்பையின் பல பகுதிகளை 2050ஆம் ஆண்டுக்குள் கடல் மூழ்கடித்து விடும் எனவும் மற்றொரு ஆய்வறிக்கை கூறுகிறது. இதனால் நகரின் முக்கிய அடையாளங்கள் மாயமாகும் வாய்ப்பு இருப்பதாக மும்பை மாநகராட்சி முன்னாள் கமிஷனர் இக்பால் சகால் கடந்த ஆண்டு எச்சரித்தார். ''வருகிற 2050ஆம் ஆண்டுக்குள் கப்பரடே, நாரிமன் பாயிண்ட் மற்றும் மந்திராலயா ஆகியவை மூழ்கும்" என்ற அவரது கருத்து கவனத்தை ஈர்த்தது.

ஸ்காட் கல்ப் மற்றும் பெஞ்சமின் ஸ்ட்ராஸ் ஆகியோரால் எழுதப்பட்ட இந்த ஆய்வறிக்கை, 2019ஆம் ஆண்டு அக்டோபரில் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் வெளிவந்தது. உயரும் கடல்மட்டத்தால் மும்பையின் பலபகுதிகள் அழிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் அறிக்கை எச்சரித்துள்ளது.

குறிப்பாக பிரபாதேவி-மாகிம் கடற்கரை, ஜூகு கடற்கரையின் அழகிய வளைவு மற்றும் ஜுகுவின் உள்புற பகுதிகள், வெர்சோவா, லோகண்ட்வாலா மற்றும் மத் நகர் முகத்துவார பகுதியை சுற்றியுள்ள அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் மற்றும் வடக்கே கோராய், உத்தன் மற்றும் மிரா-பயந்தர் ஆகியவை உள்ளிட்ட மும்பையின் புகழ்பெற்ற கடலோர பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் என்பதை குறிக்கிறது. மும்பை போன்ற நகரங்களில் ஏற்படும் பாதிப்பை உலக வள நிறுவனத்தின் மூத்த திட்ட ஆய்வாளர் ராஜ்பகத் பழனிச்சாமி உறுதிப்பட கூறுகிறார்.

அதே நேரத்தில் பல்வேறு கணிப்புகளில் இருக்கும் முரண்பாடுகளை நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் கடல்மட்டம் உயர்வு மும்பைக்கு புதிய சவால்களை கொண்டுவரும் என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.

உலகளவில் இதுபோன்ற ஆபத்தான நிலப்பரப்பில் வசிப்பவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதத்தினர் சீனா, வங்காளதேசம், இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய 8 நாடுகளில் வாழ்கின்றனர் என்றும் ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .