2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

போலி விமானங்கள் மூலம் பாகிஸ்தானை ஏமாற்றிய இந்தியா

Editorial   / 2025 மே 18 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது ஆளில்லாத போலி போர் விமானங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் எளிதாக ஏமாற்றி உள்ளது.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 7-ம் திகதி பாகிஸ்தானின் 9 தீவிரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்தது. இதன்பிறகு கடந்த 7,8, 9, 10 ஆகிய திகதிகளில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மிகப்பெரிய போர் நடைபெற்றது.

கடந்த 9-ம் திகதி நள்ளிரவில் பாகிஸ்தானின் 11 விமானப் படை தளங்களை, இந்திய போர் விமானங்கள் பிரம்மோஸ், ஸ்கால்ப் உள்ளிட்ட ஏவுகணைகள் மூலம் அழித்தன. இந்த தாக்குதல் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

பாகிஸ்தானின் ட்ரோன், போர் விமானங்களின் தாக்குதலை முறியடிக்க அந்த நாட்டின் விமான படை தளங்களை அழிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 9-ம் திகதி நள்ளிரவில் லட்சியா என்ற ஆளில்லா ட்ரோன்கள் பாகிஸ்தான் விமான படை தளங்கள் மீது பறக்க விடப்பட்டன.

இந்த ட்ரோன்கள் சுகோய், மிக் 29 ரக போர் விமானங்கள் போன்று தத்ரூபமாக தயார் செய்யப்பட்டு இருந்தன. இவை உண்மையான போர் விமானங்கள் என்று நம்பிய பாகிஸ்தான் விமானப்படை அனைத்து வான் பாதுகாப்பு கவசங்களையும் ஒரே நேரத்தில் இயக்கியது.

லட்சியா ட்ரோன்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவமும் விமானப் படையும் இணைந்து தரை, வான் வழியாக பல்வேறு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. ஆனால் மணிக்கு 850 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன்கொண்ட லட்சியா ட்ரோன்களை பாகிஸ்தான் விமானப் படையால் சுட்டு வீழ்த்த முடியவில்லை. இந்தியாவின் போலி போர் விமானங்களுடன் பாகிஸ்தான் போர் விமானங்கள் மிக தீவிரமாக போரிட்டு கொண்டிருந்தன. அந்த நாட்டு ராணுவம் மற்றும் விமானப் படையின் முழு கவனமும் லட்சியா ட்ரோன்கள் மீது இருந்தன.

இந்த நேரத்தில் இந்திய எல்லைப் பகுதிகளில் இருந்து சுகோய், ரஃபேல் போர் விமானங்கள் பாகிஸ்தான் விமான படைத் தளங்களை குறிவைத்து சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசின.

சுகோய் போர் விமானங்களில் இருந்து அடுத்தடுத்து சீறிப் பாய்ந்த 15 பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தான் விமான படை தளங்களை துல்லியமாக தாக்கி அழித்தன. இதேபோல ரஃபேல் போர் விமானங்களில் இருந்து சீறிப் பாய்ந்த ஸ்கால்ப் ஏவுகணைகள் பாகிஸ்தான் விமான படை தளங்களை துவம்சம் செய்தன.

இதில் பாகிஸ்தானின் 11 விமான படை தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்தன. ஏராளமான போர் விமானங்கள் அழிந்தன. ஓடுதளங்களில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டதால் எந்தவொரு போர் விமானத்தையும் இயக்க முடியாத சூழல் எழுந்தது.

மேலும் லட்சியா ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசங்கள் எந்தெந்த இடங்களில் உள்ளன என்பது மிகத் துல்லியமாக கண்டறியப்பட்டது. இதன்மூலம் அந்த நாட்டின் எச்கியூ-9 என்ற வான் பாதுகாப்பு கவசங்களும் முழுமையாக அழிக்கப்பட்டன. இவ்வாறு இந்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X