2025 ஜூலை 30, புதன்கிழமை

பாலியல் தொழிலாளர்களை துன்புறுத்தக்கூடாது: நீதிமன்றம் தீர்ப்பு

Editorial   / 2022 மே 27 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 பாலியல் தொழிலாளர்களை பொலிஸார் துன்புறுத்தக்கூடாது. அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருள்கள், நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அமர்வு விசாரித்து வருகிறது.

இவ்வழக்கு அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் கூறும்போது, "நாடு முழுவதும் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களை பொலிஸார் மோசமாக நடத்துகின்றனர். பாலியல் வழக்கில் கைதாகும் பெண்கள், அவர்களது விருப்பத்துக்கு மாறாக காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர். இந்த நடைமுறைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கோரினார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜெயந்த் கூறும்போது, "பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்படுகின்றனர். அவர்களின் பாதுகாப்புக்காகவே காப்பகங்களில் சேர்க்கப்படுகின்றனர்" என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

விருப்பத்துடன்கூடிய பாலியல் தொழில் சட்டபூர்வமானது. எனினும் பாலியல் விடுதிகள் நடத்துவது சட்டவிரோதம். பெரும்பாலான நேரங்களில் பாலியல் தொழிலாளர்களை பொலிஸார் மோசமாக நடத்துகின்றனர். இந்த அணுகுமுறையை கைவிட வேண்டும். அவர்களை உடல் ரீதியாகவோ, வார்த்தைகளாலோ பொலிஸார் துன்புறுத்தக்கூடாது. கண்ணியமாக நடத்த வேண்டும். அவர்களை கைது செய்யக்கூடாது. அபராதம் விதிக்கக்கூடாது. பாலியல் தொழிலாளர்கள் முறைப்பாடு செய்தால், அதன்பேரில் பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளையும் பாலியல் தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பாலியல் தொழிலாளர்கள் குறித்து மாநில அரசுகள் ஆய்வு செய்ய வேண்டும்.

விருப்பத்துக்கு மாறாக அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவர்களை வீட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் தொழிலாளர்களின் அடையாளம், பெயர்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 27-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .