Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Editorial / 2018 ஜூன் 06 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், ஒரு பகுதி கிடைத்துள்ளது. அந்த பிற்சேர்க்கையில், 118 பேர்கள் தொடர்பிலான விவரங்கள் எதுவுமில்லை என்று சபாநாயகர் கரு ஜயசூரிய, அறிவித்தார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்று பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகர் அறிவிப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு அறிவித்தார்.
பிணைமுறி விவகாரம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைகுழுவின் அறிக்கையில், சீ-350 முதல் சீ-360 வரையான பிற்சேர்க்கை பகுதியே நேற்று (05) கையளிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்துக்கு கையளிக்கப்படாத, அறிக்கையின் பகுதிகளைத் தருமாறு, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவிடம், சபாநாயகர் கரு ஜயசூரிய தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அண்மையில் கேட்டிருந்தார்.
அதனடிப்படையில், ஜனாதிபதி செயலகத்திலிருந்து, நாடாளுமன்றத்துக்கு நேற்று பிற்பகல் 11 மணிக்குச் சென்றிருந்த அதிகாரிகள் குழு, அந்த பிற்சேர்க்கை பகுதியை சபாநாயகரிடம் கையளித்தது.
“அதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். ஆகையால் அவர், நாடு திரும்பியதன் பின்னரே, பிணைமுறி விவகாரம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் “சீ” பிற்சேர்க்கையை, முழுமையாக பெற்றுக்கொள்வது தொடர்பில், கலந்துரையாடப்படும்” என்றார்.
இதன்போது, அவையிலிருந்த, ஜே.வி.பி உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரடங்கிய குழு, இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்ட, சீ-350 முதல் சீ-360 வரையான பிற்சேர்க்கை பகுதியை நாடாளுமன்றத்துக்கு ஆற்றுப்படுத்துமாறு கோரிநின்றனர்.
இதனிடையே எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, அர்ஜுன் அலோசிஸிடம் பணம் பெற்றுக்கொண்ட 118 பேர் தொடர்பில் தகவல்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய அவர், அவர்கள் தொடர்பான பூரணத் தகவல்களை அறியமுடியுமா எனவும் வினவினார்.
அத்துடன், இது தொடர்பான உண்மைத் தகவல்களை, வெளியிடாத பட்சத்தில், ஜனாதிபதியும் பணம் வாங்கியதாக நினைத்து அவர் மீதும் நாட்டு மக்கள் சந்தேகிக்கும் நிலை உருவாகும் எனவும் குறிப்பிட்டார்.
சமூகவலைத்தளங்களில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அலோசியஸிடம் பணம் பெற்றுக்கொண்ட குறித்த 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் அவருடன் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டவர்கள் தொடர்பிலும் தயவு செய்து, இச்சபைக்கு தாங்கள் (சபாநாயகர்) அறிவிக்க வேண்டும்.
ஏனெனில், இவ்விவகாரம் காரணமாக, நாடாளுமன்றத்திலுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், நாட்டு மக்கள் சந்தேகிக்கின்றனர். அத்துடன், இது தொடர்பான உண்மைத் தகவல்களை வெளியிடாத பட்சத்தில், ஜனாதிபதியும் பணம் வாங்கியதாக நினைத்து அவர் மீதும் நாட்டு மக்கள் சந்தேகிக்கும் நிலை உருவாகிவிடும் எனத் தெரிவித்தார்.
அத்துடன், பிணைமுறி விவகார அறிக்கையின் சீ 350- சீ 360 வரையான பக்கங்கள் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை ஏன் துண்டுத்துண்டாகத் தரப்படுகின்றதெனவும் விமல் வீரவன்ச எம்.பி கேள்வி எழுப்பினார்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர் கருஜயசூரிய,
ஜனாதிபதி செயலக அதிகாரிகளால் நாடாளுமன்றத்துக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி விவகார அறிக்கையில் உள்ள சீ 350 - சீ 360 பக்கங்களில், நிதி பெற்றவர்கள் தொடர்பான விவரங்கள் உள்ளடக்கப்படாதுள்ள அதேவேளை,118 பேரின் பெயர்களும் உள்ளடக்கப்படவில்லையென்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இதையடுத்து, கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே,
இவ்விகாரம் தொடர்பில், 24 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகாரிகள், குற்றவிசாரணைப் பிரிவு அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகாகவும் இதில் இராஜாங்க அமைச்சர் அஜித்.பீ.பெரேராவின் பாதுகாப்பு அதிகாரியும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய எந்தவோர் உறுப்பினரையும் கோப்குழு உள்ளிட்ட ஏனைய அமைப்புகளில் இணைத்துக்கொள்ளக் கூடாதெனவும் குறிப்பிட்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர,
தான் இதனுடன் தொடர்புபடவில்லை எனத் தெரிவித்த அவர், தானும் மஹிந்தானந்த அளுத்கமகேயும் இது தொடர்பில் சத்திய வாக்குமூலத்தை (திவுரும் பிரகாச) வழங்கவும் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பியின் கூற்றுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் அஜித்.பீ.பெரேரா கூறியதாவது,
அதி குற்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீரவும் மஹிந்தானந்த அளுத்கமகேயும் இதனைப் பற்றிப் பேசுவதற்கு தகுதியற்றவர்களெனத் தெரிவித்தார்.
இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் சொய்சாவும், மத்திய வங்கி பிணைமுறி அறிக்கையின் தகவல்களை சபையில் சமர்ப்பிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்ததுடன், 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் திருடர்களாகப் பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் இந்த விவகாரத்தில், பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திடமிருந்து பணம் பெறாதவர்களின் கௌரவம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்த மரிக்கார் எம்.பி, எனவே பணம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை உடனடியாக வெளியிடுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
29 minute ago
32 minute ago