2024 மே 02, வியாழக்கிழமை

‘பெண்ணை கேலி செய்வது சித்திரவதை ஆகாது’: நீதிமன்றம்

Editorial   / 2024 ஜனவரி 24 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வெறுமனே கேலி செய்வது, இழிவாகப் பேசுவது என்பது சித்திரவதை செய்வது அல்லது மனரீதியாக துன்புறுத்துவது ஆகாது” என மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

மராட்டிய மாநிலம்-நந்துர்பூரை சேர்ந்த பெண் கடந்த 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உடலில் தீவைத்து தன்னுயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக பெண்ணின் கணவர், மைத்துனர், மாமியார் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கை விசாரித்த நந்துர்பூர் அமர்வு நீதிமன்றம், பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் உட்பட 3 பேருக்கும் தண்டனை வழங்கியுள்ளது.

இதை எதிர்த்து அவர்கள் மும்பை உயர்நீதிமன்ற அவுரங்காபாத் கிளையில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

குறித்த மனுவை நீதிபதி அபய் வாக்வாசே தலைமையிலான தனி நபர் அமர்வு விசாரித்துள்ளது. விசாரணையின் முடிவில், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரையும் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

"கணவர் உட்பட 3 பேரும் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதற்கான ஆதாரங்கள் எதுவும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பெண்ணை சமைக்க தெரியவில்லை என கேலி செய்ததாகவும், பணம் கேட்டதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

வெறுமனே கேலி செய்வது, இழிவாகப் பேசுவது என்பது சித்திரவதை செய்வது அல்லது மனரீதியாக துன்புறுத்துவது ஆகாது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை சரியாக சமைக்கவில்லை, துணி துவைப்பதில்லை, அதிகமாக சாப்பிடுவதாக கேலி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், வரதட்சணை கொடுக்கவில்லை என அவர்கள் பெண்ணை கொடுமைப்படுத்தினார்கள் என்பதற்கு ஆதாரமில்லை" என கூறிய நீதிபதி, தற்கொலை செய்த பெண்ணின் கணவர் மற்றும் மைத்துனர், மாமியாருக்கு எதிராக அமர்வு நீதிமன்றம்  வழங்கிய உத்தரவை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .