Nirshan Ramanujam / 2017 நவம்பர் 02 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பில் யாரும் எதிர்ப்பு வெளியிடவில்லை. நாட்டின் தேசிய பிரச்சினையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாத வகையில் நாம் இணைந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்” என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் (01) தெரிவித்தார்.
அரசமைப்புக்கான அரசமைப்புச் சபையின் வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பான விவாதம், அரசமைப்புச் சபையில் நேற்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,
“புதிய அரசமைப்புத் தொடர்பான வழிநடத்தல் குழுவில் கட்சிகளின் யோசனைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இது இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையாக பலர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இதனால் நாட்டில் பிரச்சினைகளும் எழுந்துள்ளன” என்றும் குறிப்பிட்டார்.
“வடக்கு, கிழக்கு இணைப்பது குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால், நாடு பிளவுபட்டுவிடும் எனப் பேசப்படுகின்றது. இது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள யோசனையாகும். ஆனால், வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுமாயின் அது தொடர்பில் கிழக்கில் உள்ள மக்களின் அபிப்பிராயம் என்ன என்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டும்” என்றார்.
“வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கருத்துகளை முன்வைத்தனர். இந்த யோசனைகளை மாத்திரம் வைத்துக்கொண்டு தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
“பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுப்பது தொடர்பில் நாம் எந்தவித எதிர்ப்பையும் வெளிப்படுத்தவில்லை. ஏனைய மதங்களுக்கான கௌரவம் வழங்கப்பட வேண்டும். இது குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க விரிவாகப் பேசியிருந்தார். அவர் இது குறித்துப் பேசுவாராயின், பிரச்சினைகள் எழாது. இதுவே நான் பேசும்போது, இதோ இவர் இவ்வாறு பேசிவிட்டார் என நாடுமுழுவதும் அதனைக் கொண்டு செல்வதற்குப் பலர் இருக்கின்றார்கள்” என்றார்.
“நாட்டின் தேசியப் பிரச்சினையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாத வகையில் நாம் இணைந்து செயலாற்ற வேண்டும். இங்கே, புதிய தேர்தல் முறை பற்றிப் பேசப்படுகின்றது. இதில் பல பிரச்சினைகள் உண்டு. இப்போதும் சம்மாந்துறையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. முஸ்லிம் மக்களின் தலைவர்களாக நாமும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார்.
12 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
55 minute ago
1 hours ago