2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

மைத்திரி, ரணில் உட்பட 75 பேருக்கு நோட்டீஸ்

George   / 2015 நவம்பர் 02 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எஸ். செல்வநாயகம்

 

புத்தளம் நுரைச்சோலை அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரிக் கொள்வனவுக்கான ஒப்பந்தம் வழங்குவதில் தவறுகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்துத் தொடுக்கப்பட்ட வழக்கில், அமைச்சரென்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் ஏனைய 73 பேரையும், எதிர்வரும் டிசெம்பர் 15ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர்  கே.ஸ்ரீபவன், நீதியரசர்கள் பிரியந்த ஜயவர்தன, அனில் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாமே, இந்த அறிவித்தலை விடுத்தது.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட நோபிள் றிசோசர்ஸ் சர்வதேச நிறுவனத்தினாலேயே, இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நிலக்கரியை வழங்குவதற்கு, தாங்கள் கோரிய தொகையை விட 91.55 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகமான தொகையைக் கோரிய நிறுவனத்துக்கு, இந்த வாய்ப்பை வழங்கியதன் மூலம், அரசாங்கத்துக்கு 1.62 பில்லியன் ரூபாய்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குற்றஞ்சாட்டியது.

இந்தத் தவறு மூலம், இலங்கையில் சட்டரீதியான வர்த்தகத்திலும் வணிகத்திலும் ஈடுபடுவதற்கான அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் குற்றஞ்சாட்டுகிறது.

குறித்த நிறுவனத்தின் உரிமை மீறப்பட்டு, குறித்த ஒப்பந்தமானது சட்டரீதியற்று வழங்கப்பட்டிருந்தால், அந்நிறுவனத்துக்குப் போதுமான இழப்பீடு வழங்குவது குறித்தும் நீதிமன்றம் ஆராய்கின்றது.சக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய வலு அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய, லங்கா கோல் நிறுவனம், இலங்கை மின்சார சபை, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்வனவுச் செயற்குழுவின் உறுப்பினர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டுச் செயற்குழு, அமைச்சரவையின் உறுப்பினர்கள், சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர், இந்த வழக்கின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X